ஈரானில் உள்ள சபஹார் துறைமுகம் வழியாக இந்தியா வர்த்தகம் செய்ய அளிக்கப்பட்டு வந்த சலுகையை அமெரிக்கா ரத்து செய்துள்ளது. இதனால் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
ஈரானின் சிஸ்தான்–பலுசிஸ்தான் மாகாணத்தில் சபஹார் துறைமுகம் அமைந்துள்ளது. மத்திய ஆசிய நாடுகளுடன் இந்தியா எளிதில் வர்த்தகம் செய்வதற்கான பாலமாக, இந்தத் துறைமுகம் இருந்து வருகிறது.
இந்தத் துறைமுகத்தை குத்தகைக்கு எடுக்க 2003ம் ஆண்டு முதலே இந்தியா முயன்று வந்தது. ஆனால், ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதரத் தடைகளால் இந்தியாவால் அந்த துறைமுகத்தை குத்தகைக்கு எடுக்க முடியாத நிலை நீடித்தது.
இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு ஈரான் மீது விதித்த தனது பொருளாதாரத் தடைகளில் இருந்து இந்தியாவிற்கு அமெரிக்கா விலக்கு அளித்தது. அதன் பயனாக, சபஹார் துறைமுகத்தை 10 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் ஒப்பந்தத்தை ஈரான் அரசுடன் இந்தியா மேற்கொண்டது.
இதற்காகப் பெரும் தொகையையும் இந்தியா செலவிட்டது. சுமார் 120 மில்லியன் டாலரை முதலீடாகவும், 250 மில்லியன் டாலரை கடனாகவும் வழங்க இந்தியா முன்வந்தது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் பிற நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தக உறவு வலுப்பட்டது. வெளிநாட்டில் ஒரு துறைமுகத்தை இந்தியா நிர்வகிப்பது இதுவே முதல்முறை.
இந்தச் சூழலிதான், சபஹார் துறைமுகம் மீதான பொருளாதாரத் தடைகளில் இருந்து இந்தியாவிற்கு வழங்கப்பட்ட விலக்கை அமெரிக்கா ரத்து செய்துள்ளது. இதுதொடர்பான உத்தரவு வரும் 29ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சபஹார் துறைமுகத்தில் செயல்பட்டு வரும் இந்திய நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஈரானுக்கும், இந்தியாவுக்கும் ஒரே நேரத்தில் நெருக்கடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே, ட்ரம்ப் இந்தியா மீது 50 சதவீதம் வரி விதித்துள்ளார். இருந்தபோதும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை. எனவே, இந்தியாவுக்குக் கூடுதல் அழுத்தம் கொடுக்கச் சபஹார் துறைமுகத்திற்கு அளிக்கப்பட்டிருந்த விலக்கை அமெரிக்கா தற்போது ரத்து செய்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், ஆணு ஆயுதம் தயாரிககும் விவகாரத்தில் ஈரான் மீது ஏற்கனவே அமெரிக்கா அதிருப்தியில் உள்ளது. எனவே, ஈரானை மிரட்டி பார்ப்பதற்காகவும் அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் தெரிகிறது.
விரைவில் தடை உத்தரவு அமலுக்கு வரவுள்ளதால், வேறு நாடுகளின் துறைமுகங்களை பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.