ஸ்ரீவில்லிபுத்தூர் சீனிவாசா பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி ஏராளமான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
தென்திருப்பதி என்று அழைக்கபடும் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாகத் தொடங்கியது.
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி அதிகாலைச் சீனிவாச பெருமளுக்குச் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மேலும், விவசாயப் பொருட்கள் மற்றும் கால்நடைகளைக் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கிச் சென்றனர்.
சேலம் கோட்டைப் பெருமாள் கோயிலில் அழகிரிநாதர், சுந்தரவல்லித் தாயார், ஆஞ்சநேயருக்குச் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டுச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கண்ணாடி மாளிகையில் அழகிரிநாதர்-சுந்தரவல்லி எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார்க் கோயிலின் கிரிவலப் பாதையில் உள்ள பூத நாராயண பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாளுக்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் கொண்டசமுத்திரம் பகுதியில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி வீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது. வீதி உலாவில் நாட்டுப்புற தெருக்கூத்து கலைஞர்கள் பக்தி பாடல்கள் பாடினர். பொதுமக்களும் நரசிம்மருக்குக் கற்பூர தீபாராதனைக் காட்டி வழிபாடு நடத்தினர்.