ஜார்கண்டில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பல்வேறு முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தும்பொருட்டு, வெடிகுண்டுகளையும் தயாரித்துள்ளார். இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், மக்களோடு மக்களாகக் கலந்து நாச வேலைகளில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் உள்ள இளைஞர்களை மூளைசலவைச் செய்து தங்கள் அமைப்பில் இணைப்பதையும் அவர்கள் செயல்திட்டமாகக் கொண்டுள்ளனர்.
அத்தகையவர்களை அடையாளம் கண்டு தேசிய பாதுகாப்பு முகமை, தீவிரவாத தடுப்பு பிரிவு உள்ளிட்டவைக் கைது செய்து வருகின்றன. அத்தகையதொரு கைது நடவடிக்கைதான், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்றுள்ளது.
டெல்லியில் அண்மையில் கைதான Aftab Qureshi என்பவர் அளித்த தகவலின் பேரில், ஜார்க்கண்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரச் சோதனை நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக, ராஞ்சியில் உள்ள இஸ்லாம்நகரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள தபாரக் என்ற விடுதியிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அந்தப் பாழடைந்த விடுதியில் அஷார் டேனிஷ் என்ற இளைஞர் தனி அறை எடுத்துத் தங்கியுள்ளார். SSC தேர்வுக்குத் தான் தயாராகி வருவதாக அங்கிருந்தவர்களிடம் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்து செயல்பட்டு வந்ததும், ஜார்கண்ட் மாநில பாஜகத் தலைவர்களை கொலைச் செய்ய வெடிகுண்டு தயாரித்ததும் சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டது.
விடுதி அறையில் வெடிகுண்டுகளைத் தயாரித்த அஷார் டேனிஷ், அவற்றை அருகில் உள்ள சுபர்ணரேகா நதி போட்டு வெடிக்கச் செய்து சோதனை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அஷார் டேனிஷைப் பாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் வழிநடத்தி வந்ததாகவும், வெடிபொருட்களை தயாரிப்பதற்கான பொருட்கள் அமேசானில் வாங்கப்பட்டதாகவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும், பிரத்யே APP-ஐ பயன்படுத்தி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு அஷார் டேனிஷ் ஆட்களை சேர்த்து வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர்ச் சமூகவலைதங்களில் பல்வேறு குழுக்களை தொடங்கியும், பலரிடம் நிதி வசூலில் ஈடுபட்டும் வந்துள்ளார்.
அஷார் டேனிஷூக்கு ஆதரவாகச் சுஃபியான் கான், முகமது ஹுசைஃப் யமன், கம்ரான் குரேஷி போன்றோர் இருந்து வந்ததாகப் போலீசார் தெரிவித்துள்ளனர். எந்தப் பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது, இதில் வேறு யாரெல்லாம் சம்மந்தப்பட்டுள்ளார்கள் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
















