H-1B விசா கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியிருப்பது இந்தியாவுக்குதான் சாதகமாக அமையும் எனச் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். காரணம் என்ன?. இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவுக்கு என்ன தொல்லைத் தரலாம், எப்படியெல்லாம் தொல்லைத் தரலாம் என்ற நினைப்புடனே உறங்க சென்று, அந்த நினைப்புடனேயே எழும் நாடு என்றால் அது பாகிஸ்தான்தான். அந்தப் பட்டியலில் அடுத்ததாக இருந்த சீனாவைத் தற்போது பின்னுக்குத் தள்ளி, 2ம் இடம் பிடித்துள்ளது அமெரிக்கா.
இந்தியாவுக்கு எந்தெந்த நேரத்தில், என்னென்ன நெருக்கடி தரலாம் என்பது குறித்து அமெரிக்கா, ஒரு அட்டவணையே போட்டு வைத்திருக்க வாய்ப்புள்ளது. அந்நாடு லேட்டஸ்டாக இந்தியாவுக்குக் கொடுத்திருக்கும் ஷாக், H-1B விசாவின் கட்டண உயர்வு.
அமெரிக்கத் தொழில் நிறுவனங்களில் இந்தியாவைச் சேர்ந்த திறமையாளர்கள்தான் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். அந்நாட்டின் முதன்மையான தொழில்நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் யார் உள்ளார்கள் என்பதைப் பார்த்தாலே இது புலப்படும்.
மைக்ரோ சாஃப்ட் சிஇஓவாகச் சத்ய நாதல்லா, கூகுள் சிஇஓவாகச் சுந்தர் பிச்சை, adobe சிஇஓவாகச் சாந்தனு நாராயண், ibm சிஇஓவாக அரவிந்த் கிருஷ்ணா, youtube சிஇஓவாக நீல் மோகன் என முக்கிய டெக் நிறுவனங்களின் முக்கிய பொறுப்பில் இந்தியர்கள்தான் உள்ளனர்.
இது ட்ரம்பின் கண்ணை உறுத்தியதோ என்னவோ, திடீரென H-1B விசாவின் கட்டணத்தை உயர்த்திவிட்டார். வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவில் பணியாற்ற வர விரும்புபவர்கள் 88 லட்சம் ரூபாயை எண்ணி வைத்தால்தான், இனி H-1B விசா வழங்கப்படும் என அவர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
தனது இந்த நடவடிக்கையால் இந்தியாவே ஆடிபோய்விடும் என ட்ரம்ப் நினைத்திருக்கக் கூடும். இந்தியாவிற்குப் பெரிய பொருளாதார அடியாக இது அமையக்கூடும் எனவும் அவர் எண்ணியிருக்கக் கூடும். ஆனால், ட்ரம்பின் இந்த முடிவால் இந்தியாவுக்குதான் அதிக நன்மைக் கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தற்போது பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உதாரணத்திற்கு, தொடக்கத்தில் சொன்ன சத்ய நாதல்லா, சுந்தர் பிச்சை, சாந்தனு நாராயண், இந்திரா நூயி போன்றோர் அமெரிக்காவிற்குச் செல்லாமல், இந்தியாவிலேயே பணியாற்றியிருந்தால் இந்தியாவின் டெக் துறை எந்தளவு முன்னேறியிருக்கும்?.
இந்தியாவில் உள்ள மிகவும் திறமைவாய்ந்த இளைஞர்கள் பலரும் ஒரு டெம்ப்ளேட்டான செயல்திட்டத்தைக் கைவசம் வைத்துள்ளனர். நன்றாகப் படித்து ஐஐடியில் இடம்பிடிக்க வேண்டும், பின்னர் விமானத்தைப் பிடித்து அமெரிக்கா சென்று சேர வேண்டும், அங்கு ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்து அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், அமெரிக்காவின் வளர்ச்சிக்கும் இரவு பகலாக உழைக்க வேண்டும். இதுதான் அந்தச் செயல்திட்டம்.
இப்படி, திறமையானவர்கள் எல்லாம் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளுக்குச் சென்றுவிட்டால், இந்தியாவின் எதிர்காலம் என்ன ஆவது என்பது குறித்து பல்வேறு தலைவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்துள்ளனர். திறமைவாய்ந்த இந்திய இளைஞர்கள் இந்தியாவிலேயே பணியாற்றி, நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்க வேண்டும் எனப் பிரதமர் மோடியும் வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில்தான், H-1B விசாவின் கட்டணத்தை ட்ரம்ப் உயர்த்தியுள்ளது சாதகமாகப் பார்க்கப்படுகிறது. இந்த நெருக்கடியை நல்ல வாய்ப்பாகக் கருதி, திறமையான இளைஞர்களை இந்தியாவிலேயே தக்கவைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இணையத்தில் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாகச் சின்ஹா என்பவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ட்ரம்பின் இந்த நடவடிக்கை இந்தியாவைக் காட்டிலும் அமெரிக்காவுக்குதான் அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார். இந்திய திறமையாளர்களைப் பயன்படுத்தி உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்க இந்திய அரசும், தொழிலதிபர்களும் முன்வந்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேபோல, கேபர் என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், வெளிநாடு செல்லும் இந்திய திறமையாளர்கள் அடிமைகள் போலவே பணியாற்றுவதாகவும், தங்கள் தாய்நாட்டின் வளர்ச்சிக்கு அவர்கள் எதையும் செய்வதில்லை எனவும் விமர்சித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் அமெரிக்காவின் வளர்ச்சிக்காக நாம் பணியாற்றுவது அவமானகரமானது எனவும், அமெரிக்காவுக்குச் சென்று பணியாற்றுவதை முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.
இதனிடையே, இந்தாண்டு அமெரிக்காவைச் சேர்ந்த எந்தெந்த நிறுவனங்கள் எத்தனை H-1B விசாக்களைப் பெற்றுள்ளன என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி, அமேசான் 10 ஆயிரம் விசாக்களையும், மைக்ரோ சாப்ட் 5,500 விசாக்களையும், மெட்டா 5,123 விசாக்களையும், கூகுள் 4,181 விசாக்களையும் பெற்றுள்ளன.
H-1B கட்டண உயர்வால் பணியிடங்களை நிரப்ப முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, இந்த நிறுவனங்கள் அனைத்தும் அவுட்சோர்ஸிங் முறையில் பணியாளர்களைப் பணியாமர்த்த அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த அவுட்சோர்ஸிங் முறைக்கும் அமெரிக்கா கூடுதல் வரி விதிக்க விரைவில் சட்டம் கொண்டு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
















