பாகிஸ்தான், இலங்கை வரிசையில், கடுமையான பொருளாதார நெருக்கடியில் மாலத்தீவு சிக்கியுள்ளது. கிட்டத்தட்ட திவால் நிலைக்குச் சென்றுள்ள அந்நாட்டுக்கு இந்தியா உதவிக் கரம் நீட்டியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
115 சதுர மைல் கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மாலத்தீவு 1,200 தீவுகளை உள்ளடக்கிய மிகச்சிறிய நாடு ஆகும். 1965ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து முழுமையாகச் சுதந்திரம் பெற்ற மாலத்தீவு அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இஸ்லாமியக் குடியரசாக மாறியது. 2008ஆம் ஆண்டு, நாட்டின் அரசு மதமாக இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்டது.
அப்போது இருந்து,நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டு இன்று வரைத் தொடர்கின்றன. இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த மாலத்தீவு,சீனாவுடன் பெருமளவில் கடன் வாங்கியுள்ளது. போதாதென்று, இந்தியாவும் அந்நாட்டுக்கு 5000 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் வழங்கியுள்ளது.
மாலத்தீவில் வெளிநாட்டுக் கடன் நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டில் 600 மில்லியன் டாலர்கள் மற்றும் அடுத்த ஆண்டில் 1 பில்லியன் டாலர்கள் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் மாலத்தீவு உள்ளது.
முன்னதாக, 2019ம் ஆண்டு முதல் கருவூல பத்திரங்களை வாங்குவதன் மூலம் ஆண்டு தோறும் மாலத்தீவுக்குப் பல கோடி ரூபாய் அளவிலான வட்டி இல்லா நிதி உதவியைத் தொடர்ச்சியாக இந்தியா வழங்கி வருகிறது.
கடந்த ஆண்டு, இந்தியாவுக்கு வருகைப் புரிந்த மாலத்தீவு அதிபர், பிரதமர் மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, ஏற்கெனவே கடன்பத்திரங்கள் அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த 840 கோடி ரூபாய் கடனைத் திருப்பி செலுத்தும் காலம் நீட்டிக்கப் பட்டது.
மாலத்தீவின் அந்நியச் செலாவணி இருப்பு வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளது. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 18.8 மில்லியன் அமெரிக்க டாலர் மட்டுமே உள்ளது. இது நாட்டின் ஒரு மாத இறக்குமதியை ஈடுகட்ட கூட போதாது என்று கணிக்கப் பட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழலில் மீண்டும் இந்தியா, மாலத் தீவுக்கு உதவி செய்துள்ளது. கருவூலப் பத்திரங்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில் மாலத்தீவு அரசின் வேண்டுகோளின் பேரில், 50 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கருவூல பத்திரங்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடுவை மேலும் ஓராண்டுக்கு இந்தியா நீட்டித்து உள்ளது. நீட்டிக்கப்பட்ட இந்தக் காலகட்டத்தில் எந்த வட்டியும் வசூலிக்கப்படாது என்றும் இந்தியா அறிவித்துள்ளது.
ஏற்கெனவே இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன. மாலத் தீவின் அட்டு நகரில் இந்திய துணைத் தூதரகத்தையும், பெங்களூருவில் மாலத் தீவு துணைத் தூதரகத்தையும் திறக்க முடிவெடுக்கப் பட்டுள்ளது. மாலத் தீவில் ரூபே கார்டு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிகள், சாலைகள், வீட்டு வசதிகள் வேளாண் பொருளாதார மண்டலம்,மீன் பதப்படுத்தும் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் மாலத் தீவுக்கு இந்தியா உதவுகிறது. பாதுகாப்புத் துறையில் கூட்டு ராணுவப் பயிற்சி மற்றும் இராணுவ ஒத்துழைப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 28 தீவுகளின் கட்டுப்பாட்டை மாலத்தீவு இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.
திவால் நெருக்கடியால் இந்தியாவுடனான தனது அணுகுமுறையை மாற்றிய மாலத்தீவு அதிபர், சீனாவை ஓரங்கட்டிவிட்டு இந்தியாவுடன் நல்லுறவை மேம்படுத்த முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலத்தீவில் சீனாவின் வளர்ந்து வரும் நிதி இருப்பு சவாலுக்குத் திட்டமிட்ட சிறந்த வியூகத்தை இந்தியா முன்னெடுத்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.