H-1B விசா கட்டண உயர்வு இந்திய ஊழியர்களை பெரிதும் பாதித்துள்ளது. இந்நிலையில், H 1B விசா நடைமுறையில் மேலும் ஒரு முக்கிய மாற்றத்தை ட்ரம்ப் கொண்டுவந்துள்ளார். அது என்ன என்பது குறித்து இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
அண்மையில் H-1B விசாவின் கட்டணத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உயர்த்தினார். இதனால் 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயாக இருந்த கட்டணம், ஒரேயடியாக 88 லட்சம் ரூபாயாக அதிகரித்தது. இந்தச் சூழலில் விசா விதிமுறையில் மேலும் ஒரு மாற்றத்தை ட்ரம்ப் அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க அரசு 85,000 H-1B விசாக்களை மட்டும்தான் வழங்கி வருகிறது. ஆனால், அந்த எண்ணிக்கையை காட்டிலும் அதிகமான விண்ணப்பங்கள், விசா கோரி தாக்கல் செய்யப்படும். அப்போது, கணினியை கொண்டு லாட்டரி முறையில் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு விசா வழங்கப்படும்.
இந்த முறைக்கு அதிபர் ட்ரம்ப் தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தார். லாட்டரி முறையில் அல்லாமல், ஊழியர்கள் வாங்கும் ஊதியத்தின் அடிப்படையில்தான் விசாக்களை வழங்க வேண்டும் எனவும் அவர் கூறிவந்தார். தற்போது, ட்ரம்பின் விருப்பப்படியே மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளின்படி, அதிக சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு H-1B விசாவில் முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 162,528 டாலர்களுக்கு அதிகமாகச் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் இனி அதிக முன்னுரிமை பெறவுள்ளனர். திறமை அடிப்படையில் அல்லாமல், ஊதியத்தின் அடிப்படையில் விசா வழங்கும் ட்ரம்பின் முடிவுக்குப் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். Manifest Law என்ற குடியேற்ற சட்ட நிறுவனத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞரான Nicole Gunara, புதிய விதிமுறை குறைந்த ஊதியம் பெறுபவர்களை கடுமையாக பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
உதாரணமாக, “மெட்டா நிறுவனத்தில் ஒன்றரை லட்சம் டாலர் ஊதியம் பெறுபவரும், புதிதாகத் தொடங்கப்பட்ட சிறிய நிறுவனத்தில் 70,000 ஆயிரம் டாலர் ஊதியம் வாங்குபவரும் விசா வேண்டி விண்ணப்பித்தால், மெட்டா நிறுவன ஊழியருக்குதான் H-1B விசா கிடைக்கும். இதனால், அந்த சிறிய startup நிறுவனமும் பாதிக்கப்படும்.
குறைந்த ஊதியம் பெறுபவரும் பாதிக்கப்படுவார்.” என அவர் கூறியுள்ளார். Menlo Ventures நிறுவனத்தின் பங்குதாரரான Deedy Das-சும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளார். “படிப்பு முடித்துப் புதிதாக வேலைக்குச் செல்வோர் குறைந்த ஊதியம்தான் வாங்குவார்கள்.
அந்தக் குறைந்த ஊதியத்தை காரணம் காட்டி விசா வழங்க மறுப்பது தவறான முன்மாதிரியாக அமையும்” என அவர் கூறியுள்ளார். H-1B விசா பெறுபவர்களில் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். எனவே, கட்டண உயர்வை போலவே, லாட்டரி முறை நீக்கமும் இந்தியர்களைதான் அதிகம் பாதிக்கும் சூழல் உள்ளது.
















