ட்ரோன் மற்றும் எதிர்ப்பு-ட்ரோன் அமைப்புகளைச் சோதனை செய்வதற்காக, வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ‘Cold Start’ என்ற பெயரில் மிகப் பெரிய ராணுவப் பயிற்சியை இந்தியா நடத்த உள்ளது. வளர்ந்து வரும் வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிராக இந்தியப் படைகளின் தயார்நிலையை இந்தப் பயிற்சி மேம்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில், வர்த்தக மற்றும் தொழில்துறை சபை ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ட்ரோன்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள்- நவீன போரின் எதிர்காலம் என்ற மாநாடு நடைபெற்றது. இதில், மூத்த ராணுவ அதிகாரிகள், பாதுகாப்புத் துறை சார்ந்த வல்லுநர்கள் பல்வேறு பாதுகாப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் உரையாற்றிய இந்தியாவின் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படை தலைவர் ஏர் மார்ஷல் அஸ்தோஷ் தீட்சித், ‘Make in India’ போலவே, ‘Think in India’ எனப் பாரதச் சிந்தனையுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். பாகிஸ்தான், ராணுவ ட்ரோன் திறன்களை வளர்க்க முயற்சி செய்துவருகிறது என்றும், அந்நாட்டுக்கு ஒரு படி மேலே இந்தியா முன்னேறி இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அஜர்பைஜான்-ஆர்மீனியா, ரஷ்யா-உக்ரைன் போர் களத்தில், 70 சதவீத போர் ட்ரோன்களால் நடைபெற்றதாகவும், குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட ட்ரோன்கள் விலையுயர்ந்த போர் விமானங்கள் மற்றும் ராணுவ தளங்களையும் அழித்துத் தரைமட்டமாக்குவதைப் பார்க்க முடிகிறது என்றும் அஸ்தோஷ் தீட்சித் தெரிவித்தார்.
பாகிஸ்தான் ஏவிய ஏராளமான ட்ரோன்களைத் துல்லியமாகத் தாக்கி அழித்ததில் நாட்டின் பாதுகாப்பு முழுமையாகப் பாதுகாக்கப்பட்டது. இந்தியாவின் எதிர்-ட்ரோன் மற்றும் GPS-ஜாமிங் அமைப்புகள் ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தன என்று பாராட்டிய ஏர் மார்ஷல் அஸ்தோஷ் தீட்சித், எதிர்-ட்ரோன் மற்றும் வான் பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் இந்தியா இன்னும் முன்னேற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
எதிர்காலப் போர்கள் பெரும்பாலும் ட்ரோன்கள் மற்றும் எதிர்-ட்ரோன் தொழில்நுட்பங்களுக்கு இடையிலான போட்டியாக இருக்கும் என்று கூறிய அவர், எதிர்ப்பு -ட்ரோன் அமைப்புகளின் செயல்திறன் மூன்று முக்கிய திறன்களைப் பெற்றிருக்கும் என்றும் விவரித்தார்.
எதிரி ட்ரோன்களை துல்லியமாக அடையாளம் காணுதல், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி விரைவான மற்றும் துல்லியமான எதிர் தாக்குதல் செய்தல் ஆகிய மூன்று திறங்களைக் கொண்ட 10,000 க்கும் மேற்பட்ட இராணுவப் பயன்பாட்டு ட்ரோன்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவிடம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உயர் தெளிவுத்திறன் கொண்ட ரேடார் மற்றும் அகச்சிவப்பு கண்டறிதலைத் தவிர்க்கக்கூடிய உலகின் முதல் கண்ணுக்குப் புலனாகாத இரட்டைத்திறன் கொண்ட ட்ரோனான ‘ராமா’வை இந்தியா உருவாக்கி வருகிறது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ட்ரோனை 100 சதவீதம் எந்த ரேடாராலும் கண்டுபிடிக்க முடியாது என்பதே இதன் சிறப்பம்சமாகும். அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவிடம் மட்டுமே இதுபோன்ற ஸ்டெல்த் ட்ரோன்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்த மிஷன் சுதர்ஷன் சக்ரா திட்டம், அனைத்து வான் பாதுகாப்பு அமைப்புகளின் தாயாக இருக்கும் என்று தெரிவித்த ஏர் மார்ஷல் அஸ்தோஷ் தீட்சித், இதில், ட்ரோன் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல பாதுகாப்பு அமைப்புக்களின் ஒருங்கிணைந்த வான்பாதுகாப்பாகச் சுதர்ஸன் சக்ரா இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக, ‘சுதர்சன் சக்ரா’ இந்தியாவின் பாதுகாப்பு கேடயமாகவும் வாளாகவும் இருக்கும் என்று பாதுகாப்புப் படை தலைவர் அனில் சவுகான் தெரிவித்திருந்தார். இந்நிலையில், எவ்வளவு விரைவாக எவ்வளவு துல்லியமாக முப்படைகளை ஒருங்கிணைத்துப் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்த முடியும் என்பதை சோதித்து பார்க்கவே ‘Cold Start’ ராணுவப் பயிற்சியை இந்தியா மேற்கொள்ள உள்ளது.
















