ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தான் தோற்றதை உலக நாடுகள் அனைத்துமே அறியும். இருந்தபோதும், தான்தான் போரில் வெற்றிப்பெற்றதாக, தனது நாட்டு குழந்தைகளிடம் பாகிஸ்தான் அரசு கூறி வருகிறது. அதற்கேற்ப பாடபுத்தகத்தில் வரலாற்றை திருத்தியும் எழுதியுள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
பஹல்காம் தாக்குதலும், அதனை தொடர்ந்து நடைபெற்ற ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையும் பாகிஸ்தானுக்கு உலகரங்கில் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளன. ஆப்ரேசன் சிந்தூரின்போது நாம் எத்தகைய இழப்பையும், அவமானத்தையும், தலைகுனிவையும் சந்தித்தோம் என்ற உண்மை, கடுகளவுகூட அடுத்து வரும் தலைமுறைக்குத் தெரிந்துவிட கூடாது என்பதில் பாகிஸ்தான் அரசு மிகவும் கவனமாக உள்ளது.
அதன்படி, பாடபுத்தகங்களில் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்த வெறொரு வெர்ஷனை பாகிஸ்தான் அரசு பதிப்பித்துள்ளது. அதன் சில பகுதிகளை மட்டும் தற்போது பார்க்கலாம். மே 7ம் தேதி பொய்யான காரணங்களை கூறி இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் பாகிஸ்தான் மக்கள் பலர் பாதிக்கப்பட்டதாகவும் பாடபுத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா கூறிய பொய்யான குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் தக்க ஆதாரங்களுடன் மறுத்தபோதிலும் இந்தியா தாக்குதலை நிறுத்தவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே, பாகிஸ்தான் ராணுவம் மிகுந்த தைரியத்துடன் பதில் தாக்குதல் நடத்தியதாகவும், இந்தியாவின் ராணுவ நிலைகளை அழித்தொழித்ததாகவும் பாடபுத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா தனது ரஃபேல் விமானங்கள் குறித்து மிகவும் பெருமை கொண்டிருந்தது. ஆனால், அத்தகைய ரஃபேல் விமானங்களை பாகிஸ்தான் விமானப்படை சுட்டு வீழ்த்தி அசத்தியதாகவும் பாடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 26 இடங்களை பாகிஸ்தான் குறிவைத்ததாகவும், அதில் பல இடங்கள் வெற்றிகரமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாகவும் குழந்தைகளுக்குக் கதை சொல்லி வருகிறது பாகிஸ்தான்.
ஒரு கட்டத்தில் இந்தியா அதிக இழப்புகளை சந்திக்கவே, அமைதியை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டதாகப் பாடபுத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக அமெரிக்க அதிபர் டிரம்பின் கோரிக்கையே ஏற்று பாகிஸ்தான் பெரிய மனது வைத்துப் போரை நிறுத்தியதாகவும், சிறப்பான ராணுவ செயல்பாட்டிற்காக ராணுவ தளபதி அசிம் முனீருக்கு ஃபீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு வழங்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
தெய்வ திருமகள் படத்தில் தனது குழந்தையை தூங்க வைப்பதற்காக தந்தை விக்ரம் பல்வேறு கதைகளை கூறுவார். நான் அதை செய்தேன், நான் இதை செய்தேன் என அடித்து விடுவார். அத்தகைய ஒரு கதையைதான், பாகிஸ்தான் அரசும் தனது நாட்டு குழந்தைகளிடம் கூறி வருகிறது. இனி ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு வரும் அறிவற்றவர்களுக்கு நாம் எப்படி இருந்தோம் என்பது தெரியவா போகிறது என்பதுதான், பாகிஸ்தானின் வாதம்.
















