2029ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்னதாகச் சிந்துநதி நீரை வடஇந்திய மாநிலங்களுக்குத் திருப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கெனப் பிரத்யேக திட்டத்தையும் மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, தீவிரவாதிகளுக்குப் புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் வகையில் சிந்துநதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது இந்தியா. ஜம்மு-காஷ்மீரின் பஹலிகார், சலால் ஆகிய அணைகளுக்கு இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்திய மத்திய அரசு, சிந்து நதி கட்டமைப்பில் புதிதாக 6 அணைகளையும் கட்ட திட்டமிட்டிருந்தது.
அதன்படி சிந்து நதி கட்டமைப்பில் உள்ள சிந்து, ஜீலம், செனாப், ரவி, பியாஸ், சட்லஜ் ஆகிய ஆறு நதிகளின் நீரை பயன்படுத்தி வடமாநிலங்களில் செழிப்பை ஏற்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. அண்மையில் டெல்லியில் நடந்த மூத்த அமைச்சர்களின் ஆய்வு கூட்டத்தில், இதுகுறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. வடமாநிலங்களுக்கு சிந்துநதி நீரை வழங்கும் 113 கிலோ மீட்டர் நீளக் கால்வாய் பணிகள் குறித்து கூட்டத்தில் மதிப்பாய்வு செய்யப்பட்டது.
மேலும் சிந்து நதியை பியாஸ் நதியுடன் இணைக்கும் வகையில் 14 கிலோ மீட்டர் சுரங்கப்பாதை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வருவதாகவும், L&T நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியானது அடுத்த ஆண்டுக்குள் தயாராகிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் மிகவும் சவாலான பகுதி 14 கிலோ மீட்டர் சுரங்கப்பாதை கட்டுமானம் என்பதால், மலைப்பாறைகள் பற்றிய விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும்.
பலவீனமான பாறைகள் இருந்தால் குழாய்கள் மூலம் சுரங்கப்பாதை அமைக்கப்படும். வேகம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யச் சுரங்கம் துளையிடும் இயந்திரங்கள் மற்றும் பாறை கவச தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். ரவியின் துணை நதியான உஜ் நதியில் இருந்து பியாஸ் படுகைக்கு நீர் பரிமாற்றத்தைச் செயல்படுத்த ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உஜ் பல்நோக்கு திட்டத்துடன் இந்தச் சுரங்கப்பாதை இணைக்கப்படும்.
இதன் மூலம் ரவி-பியாஸ்-சட்லஜ் அமைப்பு, சிந்து நதி படுகையுடன் இணைக்கப்படும். இவ்வாறு நடந்தால், இந்தியா தனது நீர்பங்கின் பயன்பாட்டை அதிகபட்சமாகப் பயன்படுத்த முடியும். இத்திட்டத்தின் நோக்கம் ராஜஸ்தான் வறண்ட பகுதிகளுக்கு இந்திரா காந்தி கால்வாய் மூலம் தண்ணீரை திருப்பி, நீர்பாசனத்தை அதிகரிப்பதுதான்.
அதுமட்டுமன்றி ஜம்மு-காஷ்மீர், ஹரியானா, டெல்லி மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களும் இந்தத் திட்டத்தால் பயனடையும். செனாப் நதியை ரவி-பியாஸ்-சட்லஜ் அமைப்புடன் இணைக்க கட்டப்படும் கால்வாய், மாநிலங்களின் தற்போதைய கால்வாய் அமைப்புகளுடன் இணைக்கப்படும்.
இதன் மூலம் கிடைக்கும் தண்ணீர் இந்திரா காந்தி கால்வாயை நேரடியாக அடைந்து ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீகங்கா நகரின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும். இந்தத் திட்டம் இந்தியாவின் பங்கிலிருந்து அதிகப்படியான நீர், பாகிஸ்தானுக்குப் பாயவிடாமல் தடுக்கும். இது தற்போதுள்ள 13 கால்வாய் அமைப்புகளை வலுப்படுத்துவதோடு, காலநிலை மாற்றம் மற்றும் மாறிவரும் மழைப்பொழிவின் தாக்கங்களை நிவர்த்தி செய்யவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இதன் கட்டுமானம் முழுமை பெற மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை பிடிக்கும் என்றும், 2028ம் ஆணடுக்குள் தயாராகிவிடும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக நான்காயிரம் முதல் ஐநதாயிரம் கோடி ரூபாய் வரை செலவாகும் என்றும் மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது.
















