பிரதமர் மோடியை நண்பர் என்று கூறும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தான் பிரதமரையும் அந்நாட்டு இராணுவத் தலைவரையும் சிறந்த தலைவர்கள் என்று பாராட்டி இருக்கிறார். ட்ரம்பின் இரட்டை வேடம், பல சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்புயுள்ளது. பாகிஸ்தான் மீதான ட்ரம்பின் திடீர் நெருக்கத்துக்கு என்ன காரணம் ? இந்தியாவுக்கு இதன் மூலம் ட்ரம்ப் என்ன சொல்ல வருகிறார் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
முதலில் ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் ஆக்கிரமித்த போதும் சரி, பின்னர் பயங்கரவாதத்துக்கு எதிரான போரை ஆப்கானில் அமெரிக்கா தொடங்கிய போதும் சரி, பாகிஸ்தானை தெற்காசியாவில் தனக்கு ஒரு பாதுகாப்பு துருப்புச் சீட்டாக அமெரிக்கா வைத்திருந்தது. இரட்டை கோபுர பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுடனான அமெரிக்க உறவில் விரிசல் விழுந்தது.
அல்கொய்தா பயங்கரவாதி பின்லேடனை பாகிஸ்தானில் அமெரிக்க இராணுவம் கண்டுபிடித்துக் கொன்றபின், பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டையே அமெரிக்கா எடுத்தது. தனது முதல் ஆட்சிக் காலத்தில், அமெரிக்காவுக்கு பொய்கள் மற்றும் வஞ்சகத்தைத் தவிர பாகிஸ்தான் வேறு எதையும் கொடுக்கவில்லை என்று கூறிய பயங்கரவாதிகளின் புகலிடமே பாகிஸ்தான் தான் என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
மேலும், அப்போது, இந்தியாவுக்கு ட்ரம்ப் வருகை தந்த போதும், பாகிஸ்தானுக்குச் செல்லவில்லை. முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனது ஆட்சியில் பாகிஸ்தான் அரசுடனான உறவுகளை முற்றிலுமாகப் புறக்கணித்தார். ஆனால், ஜோ பைடனுக்குப் பிறகு, இரண்டாம் முறை அமெரிக்க அதிபரான ட்ரம்ப், பாகிஸ்தானைப் பாராட்டும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த சில மாதங்களில் மட்டும் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அசிம் முனீர் 3 முறை அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதேபோல், ட்ரம்புக்கு மிக நெருக்கமானவர்களும் பலமுறை பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளனர். இந்தப் பின்னணியில் கடந்த 6 ஆண்டுகளில் முதல்முறையாகப் பாகிஸ்தான் பிரதமர் செரிஃப் அமெரிக்க அதிபரைச் சந்தித்துள்ளார்.
முன்னதாக 2019ம் ஆண்டு அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்பைச் சந்தித்தார். நியூயார்க்கில் ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில், பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்பும் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் தனியே சந்தித்து பேசியதைத் தொடர்ந்து, எட்டு அரபு நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து பேசிய ட்ரம்ப் காசா போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப்பைச் சந்திப்பதற்காக அரை மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்த, பாகிஸ்தான் பிரதமருக்கும் இராணுவத் தளபதி அசிம் முனீருக்கும் ராஜ மரியாதையுடன் வரவேற்பு கொடுத்துள்ளார் அதிபர் ட்ரம்ப். இந்தச் சந்திப்பு தொடர்பாகப் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராணுவத் தளபதி அசிம் முனீருடன் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அதிபர் ட்ரம்ப்பை சந்தித்துப் பேசியதாகவும், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோயும் உடன் இருந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெள்ளைமாளிகையிலிருந்து எந்த அறிக்கையும் வரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. எனினும், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய ஏவுகணைகளால் தாக்கப்பட்ட 11 பாகிஸ்தான் விமானபடை தளங்களை மறுகட்டமைக்கவும் புதுப்பிக்கவும் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதாக ட்ரம்ப் உறுதியளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
ஏற்கெனவே, பாகிஸ்தானுக்கு 19 சதவீதம் மட்டுமே வரி விதித்த ட்ரம்ப், பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி, பாகிஸ்தானின் இருக்கும் முக்கிய கனிமங்கள், அரிய மண் வகைகள் மற்றும் பெரிய எண்ணெய் இருப்புக்களை மேம்படுத்த 500 மில்லியன் டாலர்களை அமெரிக்க முதலீடு செய்கிறது.
முன்னதாக, ஆப்கானில் உள்ள பக்ராம் விமானத் தளத்தைத் தலிபான்கள் அமெரிக்காவுக்கு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் விளைவு மோசமாக இருக்கும் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், ஆப்கானில் கால் பதிக்க பாகிஸ்தானை ஒரு நுழைவு வாயிலாக ட்ரம்ப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார் என கூறப்படுகிறது. இது ஒருபுறம் என்றால், காஷ்மீர் விவகாரத்தில், தனக்கு ஆதரவாக அமெரிக்கவைக் கொண்டுவர பாகிஸ்தான் காய் நகர்த்தி வருகிறது.
புவிசார் அரசியலில், ரஷ்யா எந்தக் காலத்திலும் இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தானுடன் சகவாசம் வைத்துக் கொள்ளாது. ஆனால் சீனாவும், பாகிஸ்தானும் பங்காளிகளாக உள்ளனர். அமெரிக்காவைப் பொறுத்தவரை ஒரு நாடு முன்னேறுகிறது என்றால், அங்கே ஒரு உள்நாட்டு பிரச்னையை ஊதி பெரிதாக்கி, ஆட்சியைக் கவிழ்த்து, தனது பொம்மை ஆட்சியை அமைக்காவிட்டால் தூக்கம் வராது. இந்தியா விஷயத்தில் அமெரிக்காவின் ஆட்சி மாற்றக் கனவு கனவாகவே உள்ளது.
மேலும், ஆசியாவில் இன்னொரு பெரிய ஜனநாயக நாடு இந்தியா வலிமை பெறுவதை அமெரிக்கா விரும்பவில்லை. காஷ்மீர் விவகாரத்தில் பலமுறை மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா முற்பட்டபோது, பிரதமர் மோடி தலைமையிலான அரசு, மூன்றாவது நாட்டின் தலையீட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவருகிறது உலகமெங்கும் 80 நாடுகளில் 750-க்கும் மேற்பட்ட ராணுவத் தளங்களை வைத்திருக்கும் அமெரிக்காவுக்கு இந்தியாவில் ராணுவத் தளம் இல்லை.
அமெரிக்க ராணுவத் தளங்கள் பெரும்பாலும் பாதுகாப்புக்காக அல்ல, அமெரிக்காவின் சுய அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதை இந்தியா புரிந்து வைத்துள்ள காரணத்தால் ராணுவத் தளம் அமைக்க அமெரிக்காவை இந்தியா அனுமதிக்கவில்லை. இனியும் அனுமதிக்காது.
இந்நிலையில் இந்தியாவை முற்றிலும் புறக்கணித்து விட்டுப் பாகிஸ்தான் பக்கம் ட்ரம்ப் சாய்ந்திருப்பது, மாப்பிள்ளை இவர் தான் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது என்ற அணுகுமுறையாகும். உலகின் பெரிய ஜனநாயக நாடு, உலகின் வேகமாக வளர்ந்து வரும் நாடு, உலகின் நான்காவது பெரிய இராணுவம், உலகின் நான்காவது பெரிய பொருளாதாரம், எனத் தற்சார்பு மற்றும் தன்னம்பிக்கை பாரதத்துடனான உறவை ட்ரம்ப் தவறாகக் கையாளுகிறார் என்றே சர்வதேச அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.