தங்களது போர் விமானங்களை நேட்டோ படைகள் சுட்டு வீழ்த்தினால், மூன்றாம் உலகப்போர் உருவாகும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. எதனால் இந்த அசாதாரண சூழல்? விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்..
நேட்டோ உறுப்பு நாடான எஸ்தோனியாவின் வான் எல்லைக்குள் ரஷ்யாவின் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஷ்யாவின் மூன்று மிக் 31 ரக போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து சுமார் 12 நிமிடங்கள் வரை பறந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், எஸ்தோனியா வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்தது.
இதேபோல், போலாந்து மற்றும் ருமேனியா நாடுகளின் வான் எல்லைகளிலும், ரஷ்ய ட்ரோன்கள் பறந்தாக குற்றச்சாட்டு எழ, நேட்டோ அமைப்பு கடும் எதிர்ப்பை பதிவு செய்தது.
ரஷ்யாவை எச்சரிக்கும் விதமாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தங்கள் படைகளை ஒருங்கிணைக்க தொடங்கியதால், போர் பதற்றம் ஏற்பட்டது. இது குறித்து பிரான்ஸில் செய்தியாளர்களிடம் பேசிய நேட்டோ பொது செயலர் மார்பிரட், ரஷ்யாவின் அத்துமீறல் தொடருமானால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதனிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கருத்து பிரச்னையை மேலும் பூதாகரமாக்கியுள்ளது. நேட்டோ உறுப்பு நாடுகளின் வான் எல்லைக்குள் ரஷ்ய விமானங்கள் ஊருடுவினால், சுட்டுவீழ்த்தப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுக்க, அது ரஷ்யாவை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
நியூயார்க்கில் நடைபெற்ற ஜி-20 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பேசிய ரஷ்ய அமைச்சர் லாவ்ரோவ், தங்களது போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டால் நிச்சயம் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுத்தார். ஏற்கனவே உக்ரைனுக்கு உதவுவதன் மூலம் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் ரஷ்யா மீது போர் தொடுத்துள்ளதாக ஆவேசப்பட்ட லாவ்ரோ, இனியும் பொறுமை காக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதேபோல் பிரான்ஸ் நாட்டிற்கான ரஷ்ய தூதராக பணியாற்றும் மெஸ்கோவ்வும் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்ய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டால், தங்கள் நாட்டின் மீது போர் தொடுக்கப்பட்டதாக தான் கருத முடியும் என கூறியுள்ளார். நேட்டோ உறுப்பு நாடுகளின் எல்லைக்குள் ரஷ்ய விமானங்கள் பறந்ததற்கான ஆதாரத்தை சமர்ப்பித்துவிட்டு எந்த வீரவசனத்தையும் பேசுங்கள் என நேட்டோ அமைப்பிற்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.
நேட்டோவில் இணையக்கூடாது என மூன்று ஆண்டுகளுக்கு மேலாக உக்ரைனுடன் ரஷ்யா போர் புரிந்து வரும் நிலையில், தற்போதைய மோதல் போக்கு மேலும் மேலும் அசாதரண சூழலை உருவாக்கியுள்ளது.