கரூர் கொடுந்துயரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க பாஜக எம்பி ஹேமா மாலினி தலைமையிலான குழுவினர் கோவை வந்தடைந்தனர்.
கரூர் கொடுந்துயர நிகழ்வில் பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, கள ஆய்வு செய்து விசாரணை அறிக்கையை தலைமைக்குத் தெரியப்படுதுவோம் என, கோவை விமான நிலையத்தில் ஹேமா மாலினி தலைமையிலான எம்பிக்கள் குழுவினர் தெரிவித்தனர்.
கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நட்டா உத்தரவின் பேரில் எம்.பி ஹேமா மாலினி தலைமையில் அமைக்கப்பட்ட எட்டு பேர் குழுவினர் இன்று காலைக் கோவை விமான நிலையம் வந்தனர்.
எம்.பி ஹேமா மாலினி மற்றும் எம்.பி அனுராக் தாகூர் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய அரசியல் வரலாற்றில் முதல்முறையாகக் கரூரில் நடைபெற்ற கொடுந்துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பாதிக்கப்பட்ட மக்களுடன் நாங்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதுடன் அவர்களுடன் உணர்வுபூர்வமாக நாங்கள் உடன் இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தவே இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
கரூரில் சம்பவம் நடந்த இடத்தில் நேரில் கள ஆய்வு செய்து அதன் அறிக்கையை எங்கள் தலைமையகத்துக்குச் சமர்ப்பிப்போம். கள ஆய்வு மேற்கொண்டபின் மட்டுமே இந்நிகழ்வுக்கான காரணம் என்ன என்பது தெரிய வரும். நேற்று மாலை இந்தக் குழு அமைக்கப்பட்டது.
இதில் மகாராஷ்ட்ரா, ஹிமாச்சலப் பிரதேசம், மதுரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எம்பிக்கள் உள்ளனர். குழு அமைக்கப்பட்ட உடன் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு கோவை வந்துள்ளோம். கரூர் சம்பவத்திற்கு யார் காரணம், தவறு எங்கே நடந்தது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் தீவிரமாக விசாரிப்போம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.