உலகளாவிய கடன் மதிப்பீட்டு நிறுவனமான Moody’s Investors Service இந்தியாவின் மதிப்பீட்டை BAA3 என்ற தரவரிசையில் தக்க வைத்துள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பால் ஏற்படும் சவால்கள் இருந்தபோதிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முன்பு இருந்ததை விட வேகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. BAA3 மதிப்பீடு என்றால் என்ன? இந்த மதிப்பீடு எதைக் குறிக்கிறது? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உலகளாவிய மதிப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் மதிப்பீடுகளுக்குப் பல்வேறு வளர்ச்சி அளவு கோள்களைப் பின்பற்றுகின்றன. அவற்றில் பொருளாதார வளர்ச்சி விகிதம், பணவீக்கம், பொது அரசுக் கடன் மற்றும் குறுகிய கால வெளிநாட்டுக் கடன் ஆகியவை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாகக் கொள்ளப் படுகின்றன.
இந்த மதிப்பீட்டு முறையில் குறிப்பிட்ட நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையும் கருத்தில் கொள்ளப்படுகிறது. சர்வதேச அளவில் இந்த மதிப்பீடுகள் மிக முக்கியமானவையாகக் கருதப் படுகிறது. முதலீட்டாளர்கள் ஒரு நாட்டில் முதலீடு செய்வதற்கு முன், அதன் கடன் தகுதியினை தீர்மானிக்க இந்தக் கிரெடிட் ரேட்டிங் தான் அடிப்படையாக உள்ளது. மேலும் இந்தக் கிரெடிட் ரேட்டிங் அடிப்படையில் தான், ஒரு நாடு கடன் வாங்கும்போது அதற்கான வட்டி விகிதமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் கிரெடிட் ரேட்டிங் என்பது உலக நாடுகளுக்கான ஒரு Barometer ஆகப் பயன்படுத்தப் படுகிறது. இந்த மதிப்பீட்டு தரவரிசையில் இந்தியா நீண்டகாலமாகவே Baa3 என்ற மதிப்பீட்டைத் தக்கவைத்து கொண்டுள்ளது. ‘Baa3’ என்பது மிகக் குறைந்த முதலீட்டு தரம் ஆகும். இந்த மதிப்பீடுகள் நாட்டின் கடன் வலிமைகளைத் தக்கவைக்கும் திறனை எடுத்துக் காட்டுகிறது.
அமெரிக்காவின் வரி விதிப்புகள், சர்வதேச பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், புவிசார் அரசியலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய வர்த்தக கொள்கைகள் போன்ற பாதகமான சூழல் நிலவும் நிலையிலும், உள்நாட்டு உற்பத்தித்துறையில் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் இந்தியாவின் திறனை மூடிஸ் நிறுவனம் மீண்டும் உறுதி செய்துள்ளது.
வலுவான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மற்றும் தொடர்ச்சியான நிதி ஒருங்கிணைப்பு ஆகியவை மத்திய அரசின் அதிக கடன் சுமையைப் படிப்படியாகக் குறைக்கும் என்று குறிப்பிட்டுள்ள இந்த மதிப்பீட்டு அறிக்கையில் குறுகிய காலத்தில் கடன் வாங்கும் தன்மையை அதிகரிக்க வாய்ப்பில்லை என்றும் கணித்துள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பு இந்தியாவைப் பாதிக்காது என்று கூறியுள்ள இந்த மதிப்பீட்டு அறிக்கை, அமெரிக்காவின் H1B விசா கட்டண உயர்வு மற்றும் அவுட்சோர்சிங் பிரச்சினை என ட்ரம்பின் நிர்வாகம் எடுத்த கொள்கை முடிவுகள் இந்தியாவின் IT துறையைப் பாதிக்காது என்றும் தெரிவித்துள்ளது.
மூடிஸ் நிறுவனம் மட்டுமின்றி, S&P குளோபல், இந்தியாவின் மதிப்பீட்டை BBB ஆக உயர்த்தியுள்ளது. கடந்த18 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த மதிப்பீட்டை இந்தியா பெற்றுள்ளது. இது நாட்டின் வலுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் நிதி மேலாண்மை முன்னேற்றத்தை எடுத்துக் காட்டுகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு 6.8 சதவீத வளர்ச்சியை எட்டும் என்றும் S&P குளோபல் கணித்துள்ளது.
இதனையடுத்து, பரந்த நிதிப் பற்றாக்குறைகள் இருந்தபோதிலும் இந்தியாவின் கடன்-GDP விகிதத்தைப் படிப்படியாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மத்திய அரசின் சிறந்த செயல்திறன் தான் உலகளாவிய பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக நாட்டை நிலைநிறுத்தியுள்ளது.
கோவிட் காலத்துக்குப் பின் இந்தியாவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக பார்க்கப் படுகிறது. இந்தியாவின் பொருளாதார வலிமைக்குச் சான்றாக மூடிஸ் மற்றும் S&P குளோபல் போன்ற நிறுவனங்களின் மதிப்பீட்டு அறிக்கை அமைந்துள்ளது.
















