கரூர் துயர சம்பவத்துக்கு விஜய் குறித்த நேரத்தில் வராததே காரணம் எனப் பலரும் குற்றம்சாட்டும் நிலையில், ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகப் பிரதமர் மோடியின் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
கடந்த 27-ம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் பலியாகியுள்ளனர். இதற்குப் பல மணி நேர தாமதத்துக்கு பின்னர் விஜய் பிரச்சாரம் நடைபெறும் இடத்தை வந்தடைந்ததே காரணம் எனப் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கரூர் துயர சம்பவத்துடன் ஒப்பிட்டு, ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக பிரதமர் மோடியின் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
கடந்த 2022-ல் ராஜஸ்தானின் அபுவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காகக் குஜராத்தில் இருந்து வந்த பிரதமர் நரேந்திர மோடி விழா மேடையை மிகவும் தாமதமாகவே வந்தடைந்தார்.
இருப்பினும் இரவு நேரமானதால் விதிமுறைகளுக்கு உட்பட்டு மைக் இல்லாமலேயே மேடையில் உரையாற்றினார். மேலும், தாமதமான வருகைக்காக மேடையிலேயே மண்டியிட்டு மக்களிடம் மன்னிப்பும் கேட்டார்.
இந்தக் காணொலியை பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், ஒரு தலைவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனப் பிரதமர் மோடியிடம் இருந்து விஜய் கற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.