அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகளால், அந்நாட்டின் தொழிற்சாலை உற்பத்தி தொடர்ந்து 7வது மாதமாகச் சரிவைக் கண்டுள்ளது. உற்பத்தியை அதிகரிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தபோதும், வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததன் காரணம் என்ன? பார்க்கலாம்… விரிவாக..
அமெரிக்காவில் தொழிற்சாலை உற்பத்தியைத் தூக்கி நிறுத்துவதாகக் கூறி பதவியேற்றிருந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்… ஆனால் உண்மையில் நிலைமை வேறாக உள்ளது. செப்டம்பர் மாத நிலவரப்படி, அமெரிக்க தொழிற்சாலை உற்பத்தியானது தொடர்ச்சியாக 7 மாதங்களாக சரிவை கண்டுள்ளதாகக் கூறுகிறது அமெரிக்க மேலாண்மை நிறுவனத்தின் உற்பத்தி குறியீடு. இது தொழில்துறையை வலுப்படுத்தி அமெரிக்காவை தலைசிறந்த நாடாக மாற்றுவதாகத் தம்பட்டம் அடித்த டிரம்பின் முழக்கத்தை மங்க செய்துள்ளது.
ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து, அவரது கொள்கைகள், வரி விதிப்பு முதல் புலம்பெயர்ந்தவர்கள் மீதான அடக்குமுறை வரை பொருளாதார ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதன் காரணமாகப் பொருளாதார வளர்ச்சி மந்தமாகியுள்ளது, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
மந்த நிலைக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன…. அமெரிக்க மாகாணங்களில் மூன்றில் ஒரு பங்கு ஏற்கனவே மந்தநிலையில் உள்ளதாகக் கூறும் பொருளாதார வல்லுநர்கள், அமெரிக்க பொருளாதாரம் தேக்க நிலை என்ற ஆபத்தான நிலையை நோக்கிப் பயணப்பட்டு கொண்டிருப்பதாக எச்சரித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மையானது 4.3 சதவிகிதமாக உயர்ந்திருப்பதாகத் தொழிலாளர் புள்ளிவிவர பணியகம் சுட்டிக்காட்டியிருக்கிறது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் உற்பத்தி வளர்ச்சியடைந்தபோதும், தவறான நம்பிக்கையால் அமெரிக்காவின் உற்பத்தி தொடர்ந்து வீழ்ச்சி நிலையிலேயே உள்ளது.
செப்டம்பர் மாத அறிக்கையில் ISM தலைவர் சூசன் ஸ்பென்ஸ், உற்பத்தி விகிதம் மெதுவாகச் சரிந்து வருவதாகக் கூறியிருக்கிறார். அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம் வேலைவாய்ப்பையும் பொருளாதார உற்பத்தித்திறனையும் பாதிக்கும் என்ற கவலைகள் ஒரு பக்கம் இருந்தாலும், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளும் சவால்களை ஏற்படுத்துகின்றன. எனினும் உற்பத்தித்துறையில் அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்தி, இழந்த சரிவை நிலைநிறுத்தும் என்பது பொருளாதார வல்லுநர்களின் கூற்றாக உள்ளது.