இந்தியா – பூட்டான் நாடுகளுக்கு இடையே 4 ஆயிரத்து 33 கோடி ரூபாய் மதிப்பில் ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளன. புவிசார் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ‘கோழியின் கழுத்துக்கு’ அருகே அமையவிருக்கும் இந்தப்பாதையால் பல்வேறு பயன்கள் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் மாநிலம் போர்பந்தரையும் அசாமின் சில்சாரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 27, மேற்குவங்கத்தின் சிலிகுரி அருகே மிகவும் குறுகி காணப்படும். வடக்கே நேபாளத்துக்கும் தெற்கே வங்கதேசத்துக்கும் இடையே உள்ள இந்த இடம் பார்ப்பதற்கு கோழியின் கழுத்தைப் போல் இருப்பதால் அந்தப் பெயரையே வைத்துவிட்டார்கள்.
வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சலப்பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா மற்றும் மேகாலயாவை ஏழு சகோதரிகள் என்றழைப்பார்கள். அவற்றை இந்தியாவின் பிற இடங்களுடன் இணைப்பதில் தேசிய நெடுஞ்சாலை 27-க்கு பெரும் பங்குண்டு. 2017-ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கு இடையே எல்லைப் பிரச்னை ஏற்பட்ட டோக்லாம் பகுதிக்கு அருகில்தான் இந்தப் பகுதி இருக்கிறது. இந்தியா – சீனா – பூட்டான் ஆகிய மூன்று நாடுகளின் எல்லைகள் இணையும் இடம் டோக்லாம் பீடபூமி. இது சிக்கிம் மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ளது.
இப்பகுதியில் 2017-ஆம் ஆண்டு சீன ராணுவம் சாலைப் பணிகளை மேற்கொண்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திய ராணுவத்தினர், அப்பணிகளைத் தடுத்து நிறுத்தினர். மேலும் அங்கே போடப்பட்டிருந்த சாலையை அகற்றிய இந்திய வீரர்கள், சீன ராணுவத்தினரையும் வெளியேற்றினர். இந்த விவகாரம் இரண்டு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழலை உருவாக்கியது. இப்படி உள்நாட்டிலும் புவிசார் அரசியலிலும் முக்கியத்துவம் வாய்ந்த கோழியின் கழுத்துக்கு பக்கத்தில் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளன.
2022-ஆம் ஆண்டு நேபாளத்துடன் ரயில் தொடர்பை ஏற்படுத்திய இந்தியா தற்போது அதை பூட்டானுக்கும் விரிவுப்படுத்தியுள்ளது. 2024-ஆம் ஆண்டுப் பிரதமர் மோடி அந்நாட்டுக்குச் சென்றபோது இதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.
அசாம் மாநிலத்தின் KOKRAJHAR-க்கும் பூட்டானின் GELEPHU-வுக்கு இடையே 69 கிலோ மீட்டர் தொலைவுக்கு முதல் ரயில்பாதையும் மேற்குவங்கத்தின் BANARHAT – பூட்டானின் SAMSTE-வுக்கும் இடையே 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு இரண்டாவது ரயில்பாதையும் அமைக்கப்படவுள்ளன. முதல் திட்டம் 4 ஆண்டுகளிலும் இரண்டாவது திட்டம் 3 ஆண்டுகளிலும் நிறைவேற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றின் மொத்த மதிப்பு 4 ஆயிரத்து 33 கோடி ரூபாய். KOKRAJHAR-ல் இருந்து 220 கிலோ மீட்டர் தொலைவிலும் BANARHAT-ல் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவிலும் கோழியின் கழுத்துப் பகுதி உள்ளது. KOKRAJHAR-க்கும் GELEPHU-வுக்கு இடையிலான ரயில் பாதையில் 29 பெரிய பாலங்களும் 65 சிறிய பாலங்களும் இடம்பெறுகின்றன.
அதேபோல் BANARHAT-க்கும் SAMSTE-வுக்கும் இடையே ஒரு பெரிய பாலமும் 24 சிறிய பாலங்களும் அமைக்கப்படவுள்ளன. இதன்மூலம் இரண்டு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகமும் சுற்றுலாவும் மேம்படும்.
பூட்டானின் மிகப்பெரிய வணிகக் கூட்டாளி இந்தியாதான். பெரும்பாலும் ஏற்றுமதிக்கு இந்திய துறைமுகங்களையே பூட்டான் சார்ந்திருக்கிறது. எனவே பூட்டான் பொருளாதாரம் வளரவும் அந்நாட்டு மக்கள் பன்னாட்டுச் சந்தையை அணுகவும் புதிய ரயில்பாதைகள் உதவும். மற்றொருபுறம் வடகிழக்கு எல்லையில் இந்தியாவின் பாதுகாப்பை அதிகப்படுத்தவும் இந்தத் திட்டம் பயன்படும்.