கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி மற்றும் தவறான மேலாண்மையே காரணம் எனப் பாஜக எம்பிக்கள் குழு தெரிவித்துள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அமைக்கப்பட்ட எம்பிக்கள் குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், கரூர் வேலுச்சாமிபுரத்தில் காலை 9 மணிக்கே கூட்டம் கூடத் தொடங்கியதாகவும், நண்பகலில் வரத் திட்டமிட்டிருந்த தவெக தலைவர் விஜய் இரவு 7 மணிக்குத் தான் வேலுச்சாமிபுரத்தை வந்தடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக பிரசாரம் நடந்த இடத்தில் உள்ள திறந்தவெளி கால்வாயில் விழுந்து சிலர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
தவெக பிரசார கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் மின்சாரம் தடைப்பட்டதாகவும், ஜெனரேட்டர் இயங்காததால் இருளில் மக்கள் பீதியடைந்ததாவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறுகலான இடத்தில் பிரசாரம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாகவும், அடிப்படை கூட்டக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் தவறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கரூர் சோகம் நிர்வாக அலட்சியத்தால் ஏற்பட்ட பேரழிவு என்றும், நிர்வாக அலட்சியத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.