இந்தியா – பாகிஸ்தான் இடையே பல தசாப்தங்களாகத் தீர்க்கப்படாமல் உள்ள சர் கிரீக் எல்லைப் பிரச்னை மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது… இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்…
சர் கீரிக் என்பது குஜராத்தின் கட்ச் பகுதியையும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தையும் பிரிக்கும், 96 கி.மீ. நீளமுள்ள சதுப்பு நில கழிமுக நீர்ப்பாதை. இத்தனை நீளம் இருந்தாலும் இதன் அகலம் வெறும் எட்டு கிலோமீட்டர்தான். இந்தக் கரைக்கு வந்தால் குஜராத்தின் கட்ச் பகுதி. மறு கரைக்குப் போனால் பாகிஸ்தானின் சிந்து மாகாணம்.
இந்நிலையில், பல தசாப்தங்களாகத் தீர்க்கப்படாமல் உள்ள சர் கிரீக் எல்லைப் பிரச்னை, தற்போது இரு நாடுகளுக்குமான அரசியல் மற்றும் பாதுகாப்பு சிக்கலாக மாறியுள்ளது. உப்பு ஏரியாகக் கருதப்படும் சர் கிரீக் யாருக்குச் சொந்தம் என்பது சுதந்திரம் வாங்கிய காலம் முதலே தீர்க்கப்படாத பிரச்னையாக இருக்கிறது.
வெறும் உப்புத்தண்ணீர்தானே என்று விட்டுக் கொடுத்தால் போகப் போகத் தங்கள் நிலமும் ஆக்கிரமிக்கப்படும் என்று இரு நாடுகளுமே நினைக்கின்றன. அதோடு, அள்ள அள்ளக் குறையாத மீன் வளம் கொண்ட இந்தக் குட்டிக் கடல், இரு நாட்டிலும் ஆயிரக்கணக்கான மீனவர்களுக்குத் தொழில் ஆதாரமாக இருக்கிறது.
மேலும், இயற்கை எரிவாயு வளம் நிறைந்திருப்பது கண்டறியப்பட்டிருப்பதால் இருநாடுகளும் உரிமை கோருகின்றன. 1965-ம் ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பிறகு இந்தச் சர்ச்சை பெரிதாக வெடித்தது. 1924-ம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், அப்போதைய ஒருங்கிணைந்த இந்தியாவின் பம்பாய் மாகாணத்துக்கும், சிந்து மாகாணத்துக்கும் இடையே எல்லையை நிர்ணயம் செய்ய, இந்தக் கழிமுகத்தின் நடுப்பகுதியில் 46 இடங்களில் தூண்கள் நிறுவப்பட்டன.
இதையே எல்லையாகக் குறிப்பிட்ட இந்தியா, ”கரையிலிருந்து 4 கி.மீ தூரம் வரை எங்கள் பகுதி. அங்கிருந்து 4 கி.மீ. பாகிஸ்தானுடையது” என்கிறது. ஆனால் முழு ஏரியாவும் வேண்டும் என அடம்பிடிக்கிறது பாகிஸ்தான். இப்படி உரிமை கொண்டாடினாலும், பாகிஸ்தான் ராணுவம் இந்தப் பகுதியில் ரோந்து வருவதில்லை. நம்முடைய எல்லைப் பாதுகாப்புப் படைதான் இங்குப் பாதுகாப்புப் பணியைச் செய்கிறது.
ஏனென்றால், சர் கிரீக் என்பது மிகவும் ஆபத்தான ஏரி.ஆபத்தான அலைகளும் சுருட்டி இழுத்துக்கொள்ளும் சுழல்களும் நிறைந்த நீர்ப்பகுதி. கொந்தளிக்கும் தண்ணீரால் நீருக்கடியில் திடீர் திடீர் என மணல் மேடுகள் உருவாகும் என்பதால் ரோந்து வருவதில் பாகிஸ்தான் வீரர்களுக்கு அச்சம். ஆனால், இந்திய வீரர்களோ, மணல் திட்டுக்களில் சிக்காதபடி தட்டையான படகுகளை வடிவமைத்து ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
இந்தியா சர் கிரீக் நீர்வழிப்பாதையை ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறது என்றால், பாகிஸ்தானின் முக்கிய துறைமுகமான கராச்சிக்கு செல்லும் கடல் வழி முழுவதுமாக இந்திய கட்டுப்பாட்டுக்குள் வரும். இதனால் ராணுவ ரீதியாகப் பெரும் ஆதிக்கம் கிடைக்கும். அதுமட்டுமல்ல, பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ இந்த பகுதியைப் பயன்படுத்துவதால், அதற்கும் முடிவுரை எழுத முடியும்.
சர் கிரீக் சதுப்பு நில கழிமுக பாதையை இந்தியா ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்பது பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பேச்சின் மூலம் திட்டவட்டமாகி உள்ளது. சர் கிரீக்கில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு முயற்சி மேற்கொண்டால், வரலாற்றையும் புவியியலையும் மாற்றும் அளவுக்குக் கடுமையான பதிலடியை பாகிஸ்தான் எதிர்கொள்ள நேரிடும் என்று ராஜ்நாத் சிங் அண்மையில் எச்சரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து, பல ஆண்டுகளாகத் தீர்வு காணப்படாமல் இருக்கும் சர் கிரீக் எல்லைப் பிரச்சினை, இருநாடுகளுக்கு இடையே மீண்டும் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
















