பாகிஸ்தானுக்கு AIM-120 ரக அதிநவீன ஏவுகணைகளை விற்க அமெரிக்கா முன்வந்துள்ளது. இந்த ஏவுகணைகள் பாகிஸ்தானில் விமானப்படைக்கு வலு சேர்க்கும் எனக் கூறப்படுகிறது. எனினும், இதைச் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு தனது ராணுவ வலிமையை மேம்படுத்தப் பல்வேறு முயற்சிகளைப் பாகிஸ்தான் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன ஆயுதங்களை வாங்க அந்நாட்டு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காகப் பாகிஸ்தானின் ராணுவ தளபதி அசீம் முனீர் தொடர்ச்சியாக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டபடி இருந்தார்.
அதிபர் ட்ரம்ப் உடனும், அந்நாட்டு ராணுவ அதிகாரிகளுடனும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளில் அவர் ஈடுபட்டார். மேலும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் கடந்த மாதம் வாஷிங்டன் சென்று ட்ரம்பை சந்தித்தார். இதன் பலனாக AIM-120 என்ற அதிநவீன ஏவுகணைகளைப் பாகிஸ்தானுக்கு வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது. உலகின் சக்தி வாய்ந்த ஏவுகனைகளில் ஒன்றாகக் கருதப்படும், AIM-120 ரக ஏவுகணையின் வருகை பாகிஸ்தான் விமானப்படையின் வலிமையை அதிகரிக்கக்கூடும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவை சேர்ந்த Raytheon என்ற நிறுவனம்தான் இந்த AIM-120 ரக ஏவுகணைகளைத் தயாரிக்கிறது. இன்றைய தேதிக்கு அந்நிறுவனத்திடமிருந்து போலந்து, ஜெர்மனி உள்ளிட்ட சுமார் 40 நாடுகள் இவ்வகை ஏவுகணைகளை வாங்கி வருகின்றன. AMRAAM என அழைக்கப்படும் இந்த ஏவுகணைகள் சிறிய மற்றும் இலகுரக ஏவுகணைகள் என்பதால், அவை மிகவும் வேகமாகப் பயணிக்கும். மேலும், அனைத்து வித காலநிலைகளையும் எதிர்கொள்ளும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் உள்ள ரேடார்கள் மேம்பட்ட முறையில் உருவாக்கப்பட்டுள்ளதால் அவற்றால் துல்லியமான தாக்குதலை நடத்த முடியும். ஒரே நேரத்தில் பல இலக்குகளைத் தாக்குவது இந்த ஏவுகணையின் சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது. எதிரி நாடுகளின் jamming சிக்னல்களாலும் AIM-120 ரக ஏவுகணைகளைச் செயலிழக்க செய்ய முடியாது.
இந்த ஏவுகணைகளைக் குறிப்பிட்ட விமானங்களில் இருந்து மட்டும்தான் இயக்க முடியும். உதாரணமாக, F-16, F-22, F-35, Eurofighter Typhoon போன்ற போர் விமானங்களில்தான் இவற்றை இணைக்க முடியும். பாகிஸ்தானிடம் ஏற்கனவே F-16 ரக விமானங்கள் உள்ளதால், அந்நாடு AIM-120 ஏவுகணைகளை வாங்க தொடக்கம் முதலே ஆர்வம் காட்டி வருகிறது. பாகிஸ்தான் இதுவரை சீனாவிடம் இருந்துதான் அதிகப்படியான ஆயுதங்களை வாங்கி வந்தது.
SIPRI அறிக்கையின்படி, கடந்த 5 ஆண்டுகளில் பாகிஸ்தான் வாங்கிய ஆயுதங்களில் 81 சதவீத ஆயுதங்கள் சீனாவிடம் இருந்து வாங்கப்பட்டதாக உள்ளன. தற்போது, அமெரிக்காவிடம் இருந்தும் பாகிஸ்தான் ஆயுதங்களை வாங்க தொடங்கியுள்ளது. 50 சதவீத வரிவிதிப்புக்கு பிறகு அமெரிக்காவிடம் இருந்து இந்தியா விலகிச் சென்றபடி உள்ளது.
எனவே, பாகிஸ்தானை தனது கைப்பாவையாக வைத்துகொள்ளும் பொருட்டு அமெரிக்கா அந்நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், எத்தகைய ஏவுகணைகளையும், ரேடார்களையும் எதிர்கொள்ளும் வகையில் தனது வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியா வலுப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
















