ஜாதிப் பெயர்களை நீக்குகிறோம் என்ற பெயரில், தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரைத் திணிக்க முயற்சிப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஜாதிப்பெயர்களை நீக்க உத்தரவிட்டு தமிழக அரசின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்.
மாபெரும் தலைவர்களான, அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசர் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களை திமுக அரசு புறக்கணித்திருப்பது ஏன்? என்றும்
அவர்களை இன்னும் பட்டியல் சமூகத் தலைவர்களாக மட்டுமே திமுக அரசு பார்க்கிறதா? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
உங்கள் குடும்ப நிறுவனங்களுக்கே உங்கள் தந்தை பெயரை வைக்காத நீங்கள், பொது இடங்களுக்கு அவர் பெயரை வைத்து, மக்கள் வரிப்பணத்தை இன்னும் எத்தனை காலத்திற்கு வீணடிப்பீர்கள்? என்றும், முன்னாள் முதல்வர்கள் பெயரை வைக்கிறோம் என்றால், பாரத ரத்னா புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பெயர் எங்கே? எனவும் அண்ணாமலை வினவி உள்ளார்.
ஜாதிப் பெயர்களை நீக்குகிறோம் என்ற பெயரில், தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரைத் திணிக்கும் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை திருத்தி, அனைத்துத் தலைவர்களின் பெயர்களையும் இணைத்து, புதிய அரசாணையை வெளியிட வலியுறுத்துகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.