சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஒரு வாரக் காலத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா, தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுதொடர்பாகச் சுங்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 4ஆம் தேதி சிங்கப்பூருக்கு செல்லவிருந்த பயணியிடம் 51 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க மற்றும் சிங்கப்பூர் டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், கடந்த 6ஆம் தேதி அபுதாபியில் இருந்து வந்த பயணி, உடலில் மறைத்து வைத்திருந்த 594 கிராம் எடை கொண்ட 52 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அக்டோபர் 7ஆம் தேதி பாங்காக்கில் இருந்து வந்த பயணியிடம் சுமார் 2 கிலோ கஞ்சா சிக்கியதாகவும், நேற்று பாங்காக்கில் இருந்து வந்த மற்றொரு பயணியிடம் சுமார் 7 கிலோ கஞ்சா சிக்கியதாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுங்கத்துறை சோதனையில் சிக்கிய பயணிகள்மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















