கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு தமிழக அரசுதான் காரணம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
நாமக்கல் நகரில் அவர் பேசியதாவது :, திமுக ஆட்சியில் குடிநீரில் மலம் கலக்கப்படுவது வேதனையாக உள்ளது, குறிப்பாக வேங்கைவயல் சம்பவம், சோழவந்தான் சம்பவத்தை மக்கள் மறந்திருக்க முடியாது. குடிநீரில் கழிவை கலந்த நிகழ்வு நடைபெற்றது. அந்த சம்பவங்களில் குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை குற்றவாளிகள் யார் என கண்டறியப்படவில்லை மேலும் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். அதன் முதல் குற்றவாளி தற்போது உயிரிழந்துள்ளார்.
இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என அந்த குடும்பத்தினர் நீதிமன்றத்தை நாடினர். அதற்கான அனுமதியும் நீதிமன்றம் வழங்கி உள்ளது. ஆனால் தமிழக அரசு அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறது. யாரை பாதுகாப்பதற்காக இவ்வாறான நடவடிக்கைகளில் முதல்வர் ஈடுபடுகிறார். மக்களை பாதுகாக்காத அரசாங்கமாக திமுக உள்ளது என அவ்ர் தெரிவித்தார் .
திமுக ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் போதை பொருள்கள் பழக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது. இளைஞர்கள் பலர் அதற்கு அடிமையாகினர். போதை பொருள்கள் விற்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் எச்சரிக்கை விடுத்தோம். ஆனால் இந்த அரசு கண்டு கொள்ளவில்லை. முதல்வர் ஸ்டாலின் ‘போதை பாதையில் செல்லாதீர்கள்’ என்கிறார். இந்தியாவிலேயே போதைப் பழக்கம் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் சீண்டல் என தினசரி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனை தடுக்காத அரசாங்கமாக திமுக உள்ளது என்றும் அவர் கூறினார்.
கரூர் சம்பவத்திற்கு முன் அங்கொன்றும், இங்கொன்றுமாக போலீஸார் நிற்பர். தற்போது போலீஸார் அதிகளவில் இருப்பதை பார்க்க முடிகிறது. இதற்கு முன் எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டத்திற்கு முழுமையான பாதுகாப்பை வழங்கி இருந்தால் கரூரில் 41 பேர் பலியாகி இருக்க மாட்டார்கள். அதிமுக ஆட்சியில் எவ்வளவு போராட்டங்கள் நடைபெற்ற போது அதற்கான அனுமதியை தடையின்றி கொடுத்தோம். ஆனால் இந்த ஆட்சியில் நீதிமன்றத்துக்கு சென்று அனுமதி வாங்க வேண்டிய நிலை உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கிட்னி திருட்டுக்கு ஆளாகும் நிலை விசைத்தறி தொழிலாளர்களுக்கு உள்ளது. திமுக எம்எல்ஏ ஒருவரின் மருத்துவமனையில் இவ்வாறான சம்பவங்கள் நடந்துள்ளன. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து சாப்பிட்டு 21 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. அந்த மருந்தை தயாரித்த நிறுவனம் சென்னையில் உள்ளது. தமிழக சுகாதாரத் துறைக்கு இது தொடர்பாக எதுவும் தெரியவில்லை. சுகாதாரத்துறை அலட்சியத்தாலே இந்த மாதிரியான சம்பவங்கள் நிகழ்கின்றன. மீண்டும் அதிமுக ஆட்சி அமையும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இபிஎஸ் தெரிவித்தார்.