சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தூய்மை பணியாளர்களை வலுக்கட்டாயமாகப் போலீசார் கைது செய்தனர்.
பணிநிரந்தரம் மற்றும் தனியார் மயத்தை கைவிட வலியுறுத்திக் கடந்த ஆகஸ்ட் 1 முதல் 13ஆம் தேதி வரை சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுட்டனர். ஆகஸ்ட் 13ஆம் தேதி தூய்மைப் பணியாளர்கள் நள்ளிரவு கைது செய்யப்பட்டனர்.
பலகட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் பணியமர்த்தப்படாமல் உள்ள நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனு அளிக்க வந்த தூய்மைப் பணியாளர்களை சென்ட்ரல் பேருந்து நிலையம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தூய்மைப் பணியாளர்கள், 71 நாட்களாக வேலை இல்லாமல் தவித்து வருவதாக வேதனை தெரிவித்தனர்.
பழைய முறைப்படி பணி வழங்க வேண்டி ஆணையரை சந்தித்து மனு அளிக்க வந்த தங்களை போலீசார் தடுத்து நிறுத்திக் கைது செய்ததாகக் கூறினர்.
கைது செய்தாலும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக்கூறிய தூய்மைப் பணியாளர்கள், போலீசார் கடுமையாக நடந்து கொண்டதாகக் குற்றம்சாட்டினர்.