2025-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான மரியா கொரினோ மச்சாடேவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. 8 போர்களை நிறுத்தியதாக அடம்பிடித்த ட்ரம்புக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. விரிவார பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
2025-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டின் ‘இரும்புப் பெண்மணி’ என்று அழைக்கப்படும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுலா மக்களுக்கு ஜனநாயக உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காக அயராது போராடி, சர்வாதிகாரத்திற்கு சிறிதும் அஞ்சாமல் தைரியமாகக் குரல் கொடுக்கும் மரியா கொரினா மச்சாடோவுக்கு இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் அமைதிக்கான நோபல் பரிசு மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எட்டு போரை நிறுத்தியிருக்கிறேன்… எனக்குத் தான் பரிசு வேண்டும் என அடம்பிடிக்க எதிர்பார்ப்பு எகிறியது.
அதுவும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கான முதற்கட்ட ஒப்பந்தம், பரிசு அறிவிப்பதற்கு ஒருநாள் முன்னதாகக் கையெழுத்தாகி இருக்க, யாருக்கு நோபல் பரிசு என்பது உலகம் முழுவதும் பேசுபொருளானது. ஆனால், நோபல் பரிசு தேர்வுக்குழு, ட்ரம்ப்பின் பேச்சையெல்லாம் காதில் போட்டுக்கொண்டதாகத் தெரியவில்லை.
என்னவேண்டுமானாலும் கூறுங்கள்… ரூல்ஸ்னா ரூல்ஸ் தான் என மரியா கொரினா மச்சாடோவை தேர்வு செய்திருக்கிறார்கள். தி நார்வேஜியன் நோபல் கமிட்டி தலைவர் ஜோர்கன் வாட்னே ஃப்ரிட்நெஸிடம் ட்ரம்புக்கு ஏன் விருது அறிவிக்கவில்லை என கேள்வி எழுப்பியபோது, தேர்வுக்குழுவினர் அமர்ந்திருந்த அறை, தைரியம் மற்றும் நேர்மை ஆகியவற்றால் நிரம்பி வழிந்ததாகச் சூசகமாகப் பதிலளித்தார்.
அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பானது அதிபர் ட்ரம்புக்கு நிச்சயம் ஏமாற்றமே. ஆனால், வெனிசுலாவில் சர்வாதிகாரம் துடைத்தெறியப்பட வேண்டும்… மக்களாட்சி மலர வேண்டும் என்பதே அமெரிக்காவின் நீண்ட கால நிலைப்பாடு.
எனவே மரியா கொரினா மச்சாடோவுக்கு பரிசு கிடைத்ததை ட்ரம்புக்கு ஏற்பட்ட அவமானமாகக் கருத முடியாது என்ற ஆதரவு கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
இஸ்ரேல் – ஹமாஸ் போரை நிறுத்தியதற்கு முன்னரே, மரியா கொரினா மச்சாடோ நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டதால், ட்ரம்புக்கு அடுத்த ஆண்டு வழங்கப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.
இது ஒருபுறம் இருக்க இன்னும் எத்தனை போர்களை நிறுத்தினால் நோபல் பரிசு கிடைக்குமோ என்ற கிண்டலுக்கும் உள்ளாகி இருக்கிறார் டொனால்டு ட்ரம்ப்.