தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் 50 புள்ளி 71 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை, ஐந்தாயிரத்து 934ஆக இருந்தது.
திமுக அரசு பொறுப்பேற்ற பின், பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை, பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், கடத்தல் உள்ளிட்ட குற்றங்கள், 2021ல் எட்டாயிரத்து 501ஆக இருந்தது; அது 2023ல் எட்டாயிரத்து 943ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 2021 முதல் 2023 வரை, ஆயிரத்து 208 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 82 பெண்கள் வன்கொடுமை முயற்சிக்கு ஆளாகி உள்ளனர்.
கடந்த 2019ல் நான்காயிரத்து 139ஆக இருந்த குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள், 2021ல் ஆறாயிரத்து 64ஆகவும், 2023ல் ஆறாயிரத்து 968ஆகவும் அதிகரித்துள்ளது.
இதுபோல போக்சோ வழக்குகளும் அதிகரித்துள்ள நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் பெண்கள் பணிபுரிய ஏற்ற மாநிலங்களில் தமிழகம் பின்தங்கியுள்ளது. சர்வதேச கல்வி மற்றும் திறனை அடையாளம் காணும் வகையில் அறிக்கை ஒன்றை தனியார் அமைப்பு வெளியிட்டது.
அதில் ஆந்திர மாநிலம் முதலிடம் வகிக்கும் நிலையில், அடுத்தடுத்த இடங்களை கேரளா, குஜராத் மாநிலங்கள் பிடித்துள்ளன. அதற்கு அடுத்தபடியாக தமிழகம் நான்காவது இடத்திற்கு சென்றுள்ளது.
ஒருபுறம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் பெண்கள் பணிபுரிய ஏற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் பின்தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.