ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
முதல்நாடு கிராமத்தில் உள்ள எல்லைப்பிடாரி அம்மன் பீடத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் நடைபெற்ற விழாவில் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் ஒன்று கூடி, மண் எடுத்து புதிய பீடம் அமைத்தனர்.
அதனைத்தொடர்ந்து மலர் மாலையுடன் வந்த ஆண்கள், அம்மனுக்கு மாலை அணிவித்து பொங்கல் வைத்து 35க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டனர்.
தொடர்ந்து கைகுத்தல் பச்சரிசியில் சமைக்கப்பட்ட சாதத்தை உருண்டைகளாக பிடித்து எல்லைப்பிடாரி அம்மனுக்கு படைத்து பூஜை செய்தனர். விழாவில் கலந்து கொண்ட ஆண்களுக்குப் பச்சரிசி சாத உருண்டைகள் மற்றும் இறைச்சிகள் பரிமாறப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.