கரூர் கூட்டநெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூரில் கடந்த மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
கரூர் கூட்ட நெரிசல் மற்றும் அரசியல் கட்சிகள் நடத்தும் ரோடு ஷோவுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரி தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராகத் தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்தார்.
இதேபோல், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த சிலரும், கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரி ரிட் மனுதாக்கல் செய்தனர்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரிக்கக் கோரி பாஜக சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் அனைத்தும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கரூர் கூட்டநெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
மேலும், சிபிஐ நடத்தும் விசாரணையை கண்காணிக்க ஒரு சிறப்பு மேற்பார்வை குழு அமைக்கப்படும் என்றும், சிறப்புக் குழுவுக்கு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமை தாங்குவார் எனவும், சிறப்பு விசாரணைக்குக் குழு, சிபிஐ மேற்கொள்ளும் விசாரணையைத் தொடர்ந்து கண்காணிக்கும் எனவும் ஆணையிட்டனர்.
மேலும், சிறப்பு குழுவில் தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டிராத 2 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெறுவார்கள் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
















