பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண் எனக் கூறப்படும் பாகிஸ்தானை விட்டு, அடுத்தடுத்து பெரிய பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் வெளியேறுகின்றன. ஏற்கெனவே கடும் பொருளாதார வீழ்ச்சியில் உள்ள பாகிஸ்தானுக்கு இது மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஒரு பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு இந்திய ரூபாயில் 0.30 காசுகள் எனக் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 476 முன்னணி நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் 5.6 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
இது இந்தியாவின் இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பை விட மிக மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பன்னாட்டு நிறுவனங்களாக நெஸ்ட்லே ,கோல்கேட் , பாகிஸ்தான் டொபாக்கோ, யூனிலீவர் ஃபுட்ஸ், ஜிஎஸ்கே மற்றும் அபோட் ஆகிய நிறுவனங்கள் இருக்கின்றன. மொத்தமாக இவற்றின் சந்தை மூலதன மதிப்பு 36, 660 கோடி ரூபாய் ஆகும். இந்தியாவிலும் பட்டியலிடப்பட்டுள்ள இதே நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு 14.8 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
அதாவது பாகிஸ்தானுடன் ஒப்பிடும்போது இந்திய சந்தையில் இந்நிறுவனங்களின் மதிப்பு 40 மடங்கு அதிகமாகும். பாகிஸ்தான் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள மிகப்பெரிய நிறுவனமாக அரசுக்குச் சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ogdc இருக்கிறது . இதன் சந்தை மூலதன மதிப்பு 23 , 812 கோடி ரூபாய் ஆகும்.
ஆனால் இந்தியாவின்முன்னணி எரிசக்தி நிறுவனமான ரிலையன்ஸ்யின் சந்தை மூலதன மதிப்பு 18.64 லட்சம் கோடி ரூபாய் ஆகும். 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் ஷகிதுல்லா ஷாகித் ஒரு எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
அதில், பாகிஸ்தானை விட்டுப் பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்தும் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், இல்லையென்றால் அந்நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு அந்நிறுவனங்களே பொறுப்பு என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. விலைவாசி உயர்வு,வேலை வாய்ப்பின்மை, எரிசக்தி பற்றாக்குறை, இணைய முடக்கம் எனப் பல்வேறு பிரச்சனைகளுடன் பாகிஸ்தான் மக்கள்.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கூடக் கிடைக்காமல் தவிக்கின்றனர். இந்தச் சூழலில், கடந்த அக்டோபர் 6 ந் தேதி, அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான பிராக்டர் கேம்பிள் நிறுவனம் பாகிஸ்தானில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது. ஸ்கின் கேர் மற்றும் கிளீனிங் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து விநியோகம் செய்து வந்தது.
இந்நிறுவனத்துக்கு பாகிஸ்தானின் கராச்சி மற்றும் பலுசிஸ்தானிலும் உற்பத்தி ஆலைகள் இயங்கி வந்தன. இந்த இரண்டு நிறுவனங்களையும் மூடி விட்டு வெளியேறுவதாக பிராக்டர் கேம்பிள் அறிவித்தது. இது பாகிஸ்தானில் வேலை இழப்பு மற்றும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, கடந்த ஜூலை மாதம், சர்வதேச அளவில் முதன்மையான தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், 25 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் தனது செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்தியது.
இந்த ஒரு நிறுவனம் வெளியேறியது மட்டுமே, பல பன்னாட்டு நிறுவனங்கள் வெளியேறியதற்குச் சமம் என்று கூறப்படுகிறது. அதே ஆண்டு Careem நிறுவனமும் பாகிஸ்தானில் தனது வணிக நடவடிக்கைகளை நிறுத்தியது. இதற்கு முன், 75 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த இங்கிலாந்தைச் சேர்ந்த பன்னாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ஷெல் பெட்ரோலியம், 2023 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் பாகிஸ்தானை விட்டு வெளியேறியது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் Sanofi-Aventis, Eli Lilly, Bayer, Shell, TotalEnergies, Telenor மற்றும் Pfizer உள்ளிட்ட பல நிறுவனங்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறி உள்ளன. கடந்த நான்காண்டுகளாகவே, பாகிஸ்தான் அரசு எடுத்த தவறான கொள்கை முடிவுகளால், பன்னாட்டு நிறுவனங்களும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் அந்நாட்டில் வணிகம் செய்வதில் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
திடீர் வரி மாற்றங்கள், ஒழுங்குமுறை மாற்றங்கள் மற்றும் தற்காலிக இறக்குமதி கட்டுப்பாடுகள், இலாபத்தைத் திருப்பி அனுப்புதல், வெளிநாட்டு நாணயத்தை வாங்குதல், கடன் கடிதங்களை வழங்குதல் போன்றவற்றில் தேவையில்லாத கட்டுப்பாடுகள், பன்னாட்டு நிறுவனங்களின் நிர்வாக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்குக் கடும் இடையூறுகளை ஏற்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதம், அரசியல் ஸ்திரமின்மை மற்றும் மதவெறி வன்முறை ஆகியவை நாட்டில் வணிகம் செய்வதற்கான ஆபத்தை அதிகரித்து உள்ளது குறிப்பாக, அரசின் முறையற்ற திடீர் வரிவிதிப்பு பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பெரிய தலைவலியாக மாறியுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு 29 சதவீத கார்ப்பரேட் வரி, 18 சதவீத பொது விற்பனை வரி மற்றும் 10 சதவீதம் வரை சூப்பர் வரியும் பாகிஸ்தான் அரசால் விதிக்கப் படுகிறது. இதற்கிடையே, பாகிஸ்தானில், முறைசாரா மறைமுக பொருளாதாரம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது, கடந்த 2023-ல் அந்நாட்டின் கடத்தல், கள்ளநோட்டு மற்றும் வரி ஏய்ப்பு சுமார் 68 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இது நாட்டின் முறையான பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத் தக்கது. விவசாயம், மருந்து மற்றும் மருத்துவம், தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும் தொலைத்தொடர்பு என அனைத்து துறை சார்ந்த பன்னாட்டு நிறுவனங்களும் பாகிஸ்தான் இனி நமக்குச் சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்துள்ளன. இதனால் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் அந்நிய முதலீட்டுக்கான வாய்ப்புகளும் கிடைக்காமல் பாகிஸ்தான் திணறுகிறது. இந்தச் சுழலில், கராச்சியில் உள்ள புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பும் டென்மார்க் வெளியுறவு அமைச்சகமும் இணைந்து பாகிஸ்தான் மக்களிடம் ஆய்வு நடத்தியுள்ளன.
இந்த ஆய்வறிக்கையின் முடிவுகள் குறித்து, பாகிஸ்தான் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை வெளியிட்டது. அதில், 40 சதவீத பாகிஸ்தான் மக்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்புகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் அதிகம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர் என்றும், குறிப்பாகப் பலுசிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிக அளவில் வெளியேறுகிறார்கள் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. நிச்சயமற்ற அந்தரத்தில்சுழன்று கொண்டிருக்கும் நாட்டில் வேலையின்மை அதிகரித்து வருகிறது.கொஞ்சம் திறமையுள்ளவர்களும் வெளிநாடுகளுக்கு குடிபெயர்கிறார்கள்.
உள்ளுர் மக்கள் ஏழ்மையில் உள்ளனர். தவறான ஆட்சி, தவறான கொள்கை முடிவுகள், எனத் தவறான திசையில் பயணிக்கும் பாகிஸ்தான் சர்வதேச அளவில் ஒரு நாடு என்ற நம்பிக்கையையும் இழந்து விட்டது என்று புவிசார் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.