டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் பதவிக்காலத்தை 2032ம் ஆண்டுவரை நீட்டிக்க டாடா அறக்கட்டளை ஒப்புதல் அளித்துள்ளது. அவரது தலைமைக்காக முதல்முறையாக விதிகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், தமிழரான என்.சந்திரசேகரனின் அனுபவம் டாடா குழுமத்தை மேலும் வளர்ச்சியை நோக்கி தள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை கொண்டிருக்கிறது டாடா குழுமம். ரத்தன் டாடா மறைவுக்குப் பின் டாடா குழுமத்தை வளர்ச்சி பாதைக்குத் திரும்பியவர் யாரென்றால் டாடா சன்ஸின் தலைவரும், தமிழருமான என்.சந்திரசேகரன் தான்… அவரது பதவிக்காலத்தில் டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்கள் தடைகளைத் தாண்டிய வளர்ச்சியைப் பெற்றது.
ஒரு பக்கம் அதிகார மோதல் தலையெடுத்துள்ள நிலையில், நம்பிக்கை நட்சத்திரமான என்.சந்திரசேகரனின் பதவிக்காலத்தை 2032ம் ஆண்டு வரை நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்து டாடா அறக்கட்டளை…. நிர்வாகப் பதவிகளில் இருப்பவர்கள் 65 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்பது டாடா குழுமத்தின் விதி.
அதே நேரத்தில் அப்பதவியில் இருக்கும் நபர் விருப்பப்பட்டால், 70 வயது வரை Non-executive பதவியில் தொடரலாம். இந்த முக்கியமான விதியைத் தளர்த்தி, என்.சந்திரசேகனுக்கு 3வது முறையாகப் பதவி நீட்டிப்பு வழங்கியிருக்கிறது டாடா அறக்கட்டளை.
டாடா குழுமத்தின் வரலாற்றிலேயே, செயலில் உள்ள தலைமைப் பதவிக்கு ஓய்வு விதியைத் தளர்த்துவது இதுவே முதல் முறை…. செப்டம்பர் மாதம் நடந்த டாடா அறக்கட்டளைக் கூட்டத்தில் இந்த முடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
என்.சந்திரசேகரனின் பதவி நீட்டிப்புக்குப் பல்வேறு முக்கியமான காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன… டாடா குழுமம் அடுத்த 30 ஆண்டுக்கான வளர்ச்சி பாதையைத் திட்டமிட்டுள்ள நிலையில், செமிகண்டக்டர், எலெக்ட்ரிக் வாகனப் பேட்டரிகள், ஏர் இந்தியா போன்ற முக்கிய திட்டங்களைக் கையாள தொடர்ச்சியான அனுபவம் மிக்கத் தலைவர் தேவை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்-இல் அனுபவமுள்ள என். சந்திரசேகரன், 2016-ஆம் ஆண்டு அக்டோபரில் டாடா சன்ஸ் குழுவில் சேர்ந்தார். 2017 ஜனவரியில் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட அவருக்கு, 2022 பிப்ரவரியில் இரண்டாவது முறையாக ஐந்தாண்டு பதவிக்காலம் வழங்கப்பட்டது.
என்.சந்திரசேகரன் தலைமையில், டாடா குழுமம் கடந்த 5 ஆண்டுகளில் வருவாயைக் கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கியது, நிகர லாபம், சந்தை மூலதனத்தை மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்தது.
செமிகண்டக்டர், மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள் தயாரிப்பு மற்றும் ஏர் இந்தியா போன்ற முக்கியமான திட்டங்களை, நிர்வாகத் தலைமை நேரடியாகப் பார்ப்பது அவசியம் என்று கருதப்பட்டது.
டாடா குழுமத்தின் மிகப்பெரிய திட்டங்களில் ஏற்படும் தாமதங்கள், செலவு அதிகரிப்பு அல்லது தவறான நடவடிக்கைகள் குழுவின் நம்பகத்தன்மை அல்லது நிதி ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம் . எனவேதான் என்.சந்திரசேகரனின் திறமை மற்றும் அனுபவத்தை இழக்க விரும்பாத டாடா குழுமம் அவரது பதவியை நீட்டித்துள்ளது.