விஜய் தாமதமாக வந்ததால் கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாகச் சட்டப்பேரவையில் விவாதிக்க எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் வலியுறுத்தினார்.
அப்போது, அனைவரும் பேசுவதற்கு முன்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பேரவையில் முன்வைக்க விரும்புகிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
கரூர் துயரச்சம்பவம் ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதையும் உலுக்கியது எனக் கூறினார்.
தவெகச் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று 11 நிபந்தனைகள் உடன் அனுமதி அளிக்கப்பட்டதாகவும், போதிய எண்ணிக்கையில், அதாவது 517 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இதுமட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் காவல் உயர் அதிகாரிகள், காவலர்கள் என 91 பேர் வரவழைக்கப்பட்டதாகவும், கரூர் கூட்டத்தில் மொத்தம் 606 போலீசார் பணியில் இருந்தது கவனிக்கத்தக்கதாகவும் தெரிவித்தார்.
10 ஆயிரம் பேர் வருவர் என்று கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருந்த நிலையில், அதைவிட அதிகமாக வருவார்கள் என்று கணித்துக் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்பட்டதாகக் கூறினார்.
ஆனால், அறிவிக்கப்பட்ட பகல் 12 மணிக்கு வராமல் மாலை 7 மணிக்குத் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசலுக்குக் காரணமாக அமைந்தது எனத் தெரிவித்தார்.
காலை முதல் காத்திருந்த மக்களுக்குக் குடிநீர், கழிப்பறைப் போன்ற வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும், சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட பரப்புரைக் கூட்டத்தில் போதிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் கூறினார்.
கூட்டத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற தான் ஆம்புலன்ஸ் வாகனம் வந்தது எனவும் விளக்கமளித்தார். மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் போது தவெகவினர் ஆம்புலன்ஸ் வாகனங்களைத் தாக்கியதாகவும் கூறினார்.
கரூர் சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் தன்னால் வீட்டில் இருக்க முடியவில்லை எனவும் தெரிவித்தார். மேலும், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைப் பிணவறையில் உடல்களை வைக்கப் போதிய வசதி இல்லை எனக்கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், மாவட்ட ஆட்சியரின் சிறப்பு அனுமதி பெற்று உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டதாக விளக்கமளித்தார்.