உலக நாடுகளுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னெடுத்து வரும் வர்த்தக போர், இந்தியா – பிரேசில் நாடுகளை ஒன்றிணைத்து புதிய வர்த்தக சந்தைகள் உருவாக வழிவகுத்துள்ளது. இதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.
டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் வர்த்தகக் கொள்கைகள் காரணமாக, வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளான இந்தியா மற்றும் பிரேசில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இவ்விரு நாடுகளும் தங்கள் வர்த்தக உறவுகளை வலுப்படுத்திப் புதிய சந்தைகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளன.
அதன் ஒருபகுதியாகவே இரு நாடுகளும் தற்போது 12 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள இலக்கு நிர்ணயித்துள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தலைமையில் உருவெடுத்துள்ள இந்தக் கூட்டணி, உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்காவின் புதிய கொள்கைகளால் ஏற்படும் மாற்றங்களை அடிக்கோடிட்டு காட்டியுள்ளது.
இந்நிலையில், விரைவில் டெல்லி வரவுள்ள பிரேசில் அதிகாரிகள் மற்றும் தொழில் முனைவோர் குழுவினர், விவசாயம், உயிரிபொருள், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் புதிய ஒத்துழைப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாகப் பிரேசிலின் முக்கிய ஏற்றுமதிகளான கோழி, எரிபொருள், காபி போன்றவற்றை இந்திய சந்தையைப் பயன்படுத்தி விரிவுபடுத்தப் பிரேசில் ஆர்வம் காட்டி வருகிறது.
இந்நிலையில், வருங்கால வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் அமெரிக்க வரிகளால் ஏற்பட்ட பாதிப்பை சமாளிக்க, புதிய சந்தைகளை தேடுவதை இவ்விரு நாடுகளும் முதன்மையாகக் கருதுகின்றன. கடந்த 2023-ம் ஆண்டு 2-வது முறையாகத் தலைமை ஏற்றபோது தங்கள் நாட்டின் வர்த்தகத்தை விரிவுபடுத்தப் பல நாடுகளை இலக்கு வைத்த லுலா, டிரம்பின் புதிய வரி கொள்கைகளால் தற்போது இந்தியாவுடனான உறவை வலுப்படுத்தும் முயற்சியை அதிகரித்துள்ளார்.
மற்றொருபுறம் அமெரிக்காவுடனான உறவில் சில முன்னேற்றங்கள் தென்பட்டாலும், 50 சதவீத வரி விதிகள் இன்னும் தளர்த்தப்படாமல் அமலில் உள்ளன. இந்தியா அமெரிக்காவுக்கு அதிகமாக ஏற்றுமதிகளை மேற்கொள்ளும் நாடு என்பதால், பிரதமர் மோடியும் அந்நாட்டுடனான உறவை சமநிலையில் வைத்திருக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
அதே சமயம், பிரேசில் உடனான பழைய கூட்டணியை உயிர்பித்துள்ள பிரதமர் மோடி, மேற்கத்திய நாடுகளின் “இரட்டை தரநிலை” கொள்கைக்கு எதிராக இணைந்து செயல்படவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்நிலையில், இந்தியா – பிரேசில் நாடுகளுக்கு அமெரிக்கா எப்போதும் முக்கிய சந்தையாகவே இருக்கும் எனக் கருத்து தெரிவித்துள்ள பொருளாதார நிபுணர்கள், அமெரிக்காவின் வர்த்தக போர் காரணமாக உலக வர்த்தக அமைப்பில் உருவாகும் புதிய பாதைகள் நீணடகால சவால்களாகவே இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.