மயிலாடுதுறையில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக கடைவீதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி வியாபாரம் பாதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திடீரென கொட்டிய கனமழை காரணமாக கடைவீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாரையோர வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். மேலும் வாகனங்கள் மழைநீரில் தத்தளித்தவாறு சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
ஈரோடு நகர் பகுதிகளான ஆர்.கே.வி சாலை, வீரப்பன்சத்திரம், எஸ்.கே.சி ரோடு, பன்னீர்செல்வம் பூங்கா உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழவான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் தீபாவளி பண்டிகைக்காக புத்தாடைகளை வாங்க ஈரோடு கடைவீதிகளில் வந்த பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். கனமழையால் தீபாவளி விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
நெல்லையில் பெய்த கனமழையால் நெல்லையில் தீபாவளி விற்பனை பாதிக்கப்பட்டது. நெல்லை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தீபாவளிக்கு பொருட்கள் வாங்க வந்தவர்கள் கடும் அவதியடைந்தனர். மேலும் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளானார்கள் .