கோவையில் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலம்களுக்குள் புகுந்து அச்சுறுத்தலை ஏற்படுத்திய ரோலக்ஸ் காட்டு யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டிய தொண்டாமுத்தூர்ர், தேவராயபுரம் , நரசிபுரம் போன்ற பகுதிகளில் ஊருக்குள் உலா வந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய ரோலக்ஸ் யானையை பிடிக்க அபகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
உணவுக்காக விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை ரோலக்ஸ் யானை சேதப்படுத்தியதால் விவசாயிகளும் காட்டு யானையை பிடிக்க வலியுறுத்தி வந்தனர். இதுவரை ரோலக்ஸ் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் நால்வர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறபப்டுகிறது.
கடந்த மாதம் ரோலக்ஸ் காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் முயன்ற போது மருத்துவர் விஜயராகவன் யானையால் தாக்கப்பட்டார். இதனால் இந்த யானையை பிடிப்பதில் சுணக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் அதிகாலை வலையம்பாளையம் பகுதியில் ரோல்க்ஸ் காட்டு யானையை நான்கு கும்கி யானைகள் உதவியுடன் பிடித்து வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தியுள்ளனர். தொடர்ந்து மயக்க ஊசி செலுத்தபட்ட யானையை லாரியில் ஏற்றி அப்பகுதியில் இருந்து கொண்டு செல்ல உள்ளனர்.