உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட TEJAS Mk1A இலகுரக போர் விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது… Mk1 விமானத்தின் மேம்பட்ட பதிப்பான TEJAS Mk1A இந்திய விமானப்படையின் திறன்களை மேலும் வலுப்படுத்தத் தயாராகிவிட்டது.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தால், முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட Tejas Mk1A ரக இலகு ரக போர் விமானம், வானில் சீறிப்பாய்ந்த காட்சிகள் இவை…. இந்திய விமானப்படையில் தேஜஸ் இலகுரக போர்விமானங்கள் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட Tejas Mk1A ரக இலகுரக போர்விமானங்களின் சோதனை ஓட்டம், மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
முதல் முறையாக விண்ணில் சீறிப்பாய்ந்த இவ்வகை போர் விமானங்கள் முழக்கம், இந்தியாவின் வெற்றி முழக்கமாகவே வானில் எதிரொலித்தது. Tejas Mk1A போர் விமானத்துடன், Hindustan Turbo Trainer மற்றும் Su-30 MKI பயிற்சி விமானங்களும் விண்ணில் பறந்ததை பார்க்க முடிந்தது… மிக்-21 ரக போர் விமானங்களுக்கு அண்மையில் இந்திய விமானப்படை பிரியாவிடை கொடுத்த நிலையில், Tejas Mk1A இலகு ரக விமானங்கள் அந்த இடத்தை நிரப்பக் காத்திருக்கின்றன.
அக்டோபர் மாத இறுதியில் முதல் Tejas Mk1A இலகு ரக விமானம் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்படும் என்று ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் கூறியிருக்கிறது. பெங்களூருவில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமான உற்பத்திப் பிரிவுகளில் ஆண்டுதோறும் 16 விமானங்கள் தயாரிக்கப்படுகின்றன.
தற்போது நாசிக்கில் உள்ள மூன்றாவது உற்பத்தி பிரிவு, ஜெட் விமானங்களின் உற்பத்தியை ஆண்டுக்கு 24 ஆக உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…தேஜாஸ் இலகுரக விமானங்களின் விநியோகத்தை விரைவுபடுத்த 2023ம் ஆண்டு இந்த வசதி ஏற்படுத்தப்பட்டது. Tejas Mk1A முதல் விமானம் ஏன் முக்கியமானது என்றால், இது ஒரு மேம்பட்ட, பல்துறை போர் விமானமாகப் பார்க்கப்படுவதுதான்.
4.5ம் தலைமுறை போர் விமானமான Tejas Mk1A-இல், இஸ்ரேல் EL/M-2025 AESA ரேடார், ஜாமருடன் கூடிய மேம்பட்ட Advanced Electronic Warfare Suite, Beyond Visual Range போன்ற திறன்களைக் கொண்டுள்ளன.
இந்தப் போர் விமானம் இஸ்ரேலின் டெர்பி ஏவுகணைகள், உள்நாட்டு தயாரிப்பான ASTRA ஏவுகணைகள் உள்பட 9 வகையான ஆயுதங்களை எடுத்துச் செல்லும் திறன்மிக்கது. வான் பாதுகாப்பு, கடல்சார் உளவு மற்றும் தாக்குதல் எனப் பலவிதமான பணிகளுக்குப் பயன்படுத்த முடியும்.
செப்டம்பரில், பாதுகாப்பு அமைச்சகம் 62 ஆயிரத்து 370 கோடி செலவில் 68 போர் விமானங்கள் மற்றும் 29 இரட்டை இருக்கைகள் கொண்ட 97 LCA Mk1A கூடுதலாக வாங்குவதற்காக HAL உடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன்படி அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் இந்திய விமானப்படை பிரிவில் Tejas Mk1A படிப்படியாகச் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.