இந்தியாவிடம் சரணாகதி அடைந்த பாகிஸ்தான், தாலிபான்களால் சூழப்பட்டு பாதுகாப்பற்ற சூழலில் நின்று கொண்டிருக்கிறது. ஆனால், இதையெல்லாம் பற்றித் துளியும் கவலைப்படாத பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் வெற்று வார்த்தைகளால் இந்தியாவை சீண்டியிருக்கிறார். அவர் என்ன சொன்னார். பார்க்கலாம்… இந்தச் செய்தித் தொகுப்பில்…
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இருந்து முழுமையாக மீளாத பாகிஸ்தான், அண்மையில் ஆப்கானிஸ்தானிடம் முட்டி மோதிப் பார்த்தது. ,தாலிபான்களின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல், பின்வாங்கிய பாகிஸ்தான் ராணுவத்தினர், போர் நிறுத்தத்தை ஏற்படுத்தித் தங்களை தற்காத்துக் கொண்டனர்.
நிலைமை இப்படியிருக்க, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் ஏதோ சாதித்துவிட்டது போல், இந்தியாவுக்கு எதிராகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்… எந்தவொரு தூண்டுதலுக்கும் தீர்க்கமான பதில் வழங்கப்படும் என்று அவர் இந்தியாவை மறைமுகமாக எச்சரித்திருக்கிறார்.
தாலிபான்களுக்கு எதிராகப் பாகிஸ்தான் ராணுவம் பெரும் இழப்பைச் சந்தித்தபோதும், இந்தியாவுடனான கடந்த கால மோதலில் பின்னடைவை சந்தித்த பிறகும் அசிம் முனீர் இவ்வாறான வெற்று வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்.
அணு ஆயுதமாக்கப்பட்ட சூழலில் போருக்கு இடமில்லை என்று கூறிய அசிம் முனீர், ஆப்ரேஷன் சிந்தூரில் பல முக்கிய விமான தளங்களை இழந்த போதும், பாகிஸ்தானை மிரட்ட முடியாது என்று கொக்கரித்துள்ளார். வார்த்தை ஜாலங்களால், பாகிஸ்தானை ஒருபோதும் மிரட்ட முடியாது என்று கூறியிருக்கும் அவர், சிறிய தூண்டுதலுக்குக் கூட எவ்விதமான தயக்கமும் இல்லாமல் தீர்க்கமாகப் பதிலளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அடுத்தடுத்த மோதல்கள், இறுதியில் பிராந்தியத்திற்கும், அதற்கு அப்பாலும் பேரழிவை ஏற்படுத்தக்கூடியது என்றும், புதிய போர் வெடித்தால், பாகிஸ்தான் எதிர்பார்ப்புகளைவிட அதிகமாகப் பதிலளிக்கும் என்றும் வெற்று வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்.
ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய விமானப்படை பாகிஸ்தானின் 12-13 போர் விமானங்களை அழித்தது, பாகிஸ்தான் விமான தளங்களும் தகர்க்கப்பட்டது.. இதையெல்லாம் எதிர்கொண்ட முனீர் உண்மைகளை மறைக்கச் சொல்லாட்சியை தேர்ந்தெடுத்திருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.