நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் தீபாவளி திருநாளை கொண்டாடியபோது, நாட்டை வழிநடத்தும் பிரதமர் மோடி, ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பலில் இந்திய கடற்படை வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தார். அதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காணலாம்…..
இந்தியாவின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான தீபாவளி திருநாள் நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. நாட்டை பாதுகாக்க எல்லைகளில் போராடும் பாதுகாப்பு படை வீரர்களுடன் தனது தீபாவளியை பிரதமர் நரேந்திர மோடி கொண்டாடி இருக்கிறார்.
கோவாவில் உள்ள கர்வார் கடற்கரை அருகே நிறுத்தப்பட்டிருந்த விமானம் தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்தில் நமது நாட்டின் கடற்படை வீரர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடினார் பிரதமர் மோடி. முந்தைய இரவே ஐ.என்.எஸ் விக்ராந்த் போர் கப்பலுக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்த கடற்படை வீரர்களுக்கு இனிப்புகளை ஊட்டிவிட்டு அவர்களுக்குத் தனது தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
அங்குக் கடற்படை வீரர்கள் அரங்கேற்றிய பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பிரதமர் மோடியை மெய்சிலிர்க்கச் செய்தன. குறிப்பாகக் கடற்படை வீரர்கள் “THE VOW OF SINDOOR” என்ற தலைப்பில் பாடிய பாடலை அவர் தனது கைகளால் தாளமிட்டபடி கேட்டு ரசித்தார்.
ஐ.என்.எஸ் போர் கப்பலில் இருந்து புறப்பட்ட போர் விமானங்கள் வானில் பறந்தபடி வர்ண ஜாலங்கள் காட்ட, அதனைப் பிரதமர் மோடி மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசித்தார். தீபாவளி கொண்டாட்டத்தையொட்டி ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பலில் “BARA KHANA” என்ற பெயரில் நடந்த இரவு விருந்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, கடற்படை வீரர்களுடன் இணைந்து உணவருந்தி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். மறுநாள் அதிகாலை கடற்படை வீரர்கள் மேற்கொண்ட யோகா பயிற்சியையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.
இந்த நிகழ்வின்போது வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “ஆத்மநிர்பார் பாரத்” திட்டத்தின் கீழ் இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட ஐ.என்.எஸ் விக்ராந்த் போர் கப்பல், இந்தியாவுடைய தன்னம்பிக்கையின் சின்னம் எனப் புகழாரம் சூட்டினார். தொடர்ந்து ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைகுறித்து மனம் திறந்த பிரதமர் மோடி, இந்திய பாதுகாப்பு படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு பாகிஸ்தானை சரணடைய தூண்டியதாகப் பெருமிதம் தெரிவித்தார்.
முந்தைய காலங்களில் இந்தியாவில் உள்ள 125 மாவட்டங்கள் மாவோயிஸ்டுகளின் பிடியில் இருந்ததாகத் தனது உரையில் குறிப்பிட்ட பிரதமர் மோடி, பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளால், தற்போது அது வெறும் 11 மாவட்டங்களாகக் குறைந்துள்ளதாக தெரிவித்தார். விரைவில் இந்தியா மாவோயிஸ்ட் வன்முறைகளில் இருந்து முழுமையாக விடுபட்ட நாடாக உருவெடுக்கும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து இந்திய பாதுகாப்பு துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி பணிகள் குறித்தும் பெருமையுடன் பேசிய பிரதமர் மோடி, பிரம்மோஸ் என்ற பெயரே சிலருக்கு பயத்தை ஏற்படுத்துவதாகவும், பல நாடுகள் இந்த ஏவுகணையை வாங்க ஆர்வமுடன் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். நாட்டை பாதுகாக்கும் வீரர்களுடன் கொண்டாடிய இந்த தீபாவளியை தனது வாழ்நாளில் மறக்க முடியாது எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, கலைநிகழ்ச்சியின் போது கடற்படை வீரர்கள் பாடிய தேச பக்தி பாடல்களையும் புன்னகையுடன் நினைவு கூர்ந்தார்.
மேலும், தீப ஒளியில் ஒளிரும் கடல், வீரர்கள் முகத்தில் மின்னும் பெருமை, தேசிய கொடியை தலைநிமிர்த்தும் காற்றின் ஒலி என இவை அனைத்தும் சேர்ந்து இந்த நிகழ்வை தேசத்தின் பெருமை நிறைந்த தீபாவளியாக மாற்றியுள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.
நாட்டின் சொந்த உற்பத்தி திறனும், இந்திய பாதுகாப்பு படைகள் உருவாக்கிய தன்னம்பிக்கையும், உலகிற்கு ஒரு புதிய இந்தியாவை அடையாளம் காட்டியுள்ள நிலையில், ஐ.என்.எஸ் விக்ராந்தில் பிரதமர் மோடியின் இந்தத் தீபாவளி கொண்டாட்டம் பாதுகாப்பு படை வீரர்களுக்கான மரியாதை மட்டுமல்ல, இந்தியா என்ற தன்னாட்சி சக்தியின் ஒரு வெற்றிக்கதை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.