பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு நோக்கில் இந்தியா வேகமாக முன்னேறி வரும் நிலையில், கொச்சி கப்பல் கட்டும் தளம், இந்திய கடற்படைக்கு பல அதிநவீன கப்பல்களை தயாரித்து வருவதால் நாட்டின் கடல் பாதுகாப்பு திறன் மேலும் பலப்பட உள்ளது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காணலாம்.
இந்தியாவின் மிக முக்கிய கப்பல் கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாகக் கொச்சி ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் நாட்டின் கடற்படை திறன்களை மேம்படுத்தும் முயற்சிகளில் முக்கிய பங்காற்றி வருகிறது. “ஆப்ரேஷன் சிந்தூர்” நடவடிக்கைக்குப் பின் பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்தும் மத்திய அரசின் முயற்சிகளுக்கு இணங்க, கொச்சி ஷிப்யார்டு பல பெரிய பாதுகாப்பு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
கொச்சி ஷிப்யார்டில் வடிவமைக்கப்பட்ட நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கிப் போர் கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த், இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து அந்நிறுவனம் தற்போது 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு திட்டங்களில் பணியாற்றி வருகிறது. அதில் 8 “ASW-SWC” என்னும் ANTI SUBMARAINE WARFARE SHALLOW WATER CRAFT கப்பல்கள் மற்றும் 6 NEXT GENERATION MISSILE LAUNCHING கப்பல்கள் அடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சிறிய வகை நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிந்து தாக்கும் பொருட்டே இந்த ANTI SUBMARAINE WARFARE SHALLOW WATER CRAFT கப்பல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வகை கப்பல்களில் அதிநவீன சென்சார் கருவிகள் உட்பட பல தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், “ASW-SWC” கப்பல்களின் கட்டுமான பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 6-வது கப்பலான “மக்தலா”-வை அண்மையில் தண்ணீரில் செலுத்தி சோதனை நடத்தியதாகக் கொச்சி ஷிப்யார்டின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான மது எஸ்.நாயர் தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து வகை சோதனைகளையும் முடித்துள்ள முதல் கப்பலான “மாஹே” நவம்பர் முதல் வாரத்தில் அதிகாரபூர்வமாகக் கடற்படையிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோல, NEXT GENERATION MISSILE LAUNCHING கப்பல்களின் பணிகளும் சீராக முன்னேறி வருவதாகக் கூறிய மது எஸ்.நாயர், வடிவமைப்பு மற்றும் உபகரணங்கள் கொள்முதல் பணிகள் முடிவடைந்தவுடன், விரைவில் தயாரிப்புக் கட்டத்துக்கு முன்னேறவுள்ளதாகவும் தெரிவித்தார்.
“ஆப்ரேஷன் சிந்தூர்” நடவடிக்கைக்குப் பின் அரசின் கடற்படை திறன் மேம்பாட்டு கொள்கைக்கு இணங்க, ASW-SWC திட்டம் சிறப்பாக நடைபெற்று வருவதாகத் துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடக்கத்தில் சில சவால்கள் இருந்தபோதிலும் அவற்றையெல்லாம் கடந்து வேகமாக முன்னேறி வருவதாகக் கூறும் அதிகாரிகள், குறுகிய காலத்தினுள் அடுத்தடுத்த கப்பல்களை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, கடந்த 30 ஆண்டுகளாக விமானம் தாங்கிப் போர் கப்பல்களின் பராமரிப்பை மேற்கொண்டு வரும் ஒரே கப்பல் நிறுவனம் என்ற அடிப்படையில், ஐ.என்.எஸ் விக்ரமாதித்தியாவின் குறுகிய பராமரிப்பு பணிகளும் கொச்சி ஷிப்யார்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதேபோல, ஐ.என்.எஸ் விராட், ஐ.என்.எஸ் விக்ரமாதித்தியா மற்றும் புதிய ஐ.என்.எஸ் விக்ராந்த் ஆகிய போர் கப்பல்களின் பராமரிப்பையும் இந்நிறுவனமே மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், இந்திய கடற்படையின் தன்னிறைவு நோக்கில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது என்றுதான் கூற வேண்டும்.