அமெரிக்கா- இந்தியா இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் நிலையில், இந்திய பொருட்கள் மீதான வரியை 16 சதவிகிதமாகக் குறைக்க அமெரிக்க முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன. இது தொடர்பான ஒப்பந்தம் ஆசியான் மாநாட்டில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது..
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக நிதியுதவி அளிப்பதாகக் கூறிய டிரம்ப், இந்தியா மீது 50 சதவிகித வரியை விதித்தார். இது இந்திய தொழில்துறையில் பாதிப்பை ஏற்படுத்தியபோதும், ஜிஎஸ்டி குறைப்பு, ஏற்றுமதியை சர்வதேச அளவில் பரலாக்கும் முயற்சி, சுதேசி கொள்கை என மத்திய அரசு அசர வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அதே நேரத்தில் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவிடமும் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.. அதன் பலனாக, இந்தியா – அமெரிக்கா இடையே நீண்ட காலமாக முடங்கிக் கிடந்த வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன.
எரிசக்தி, விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த ஒப்பந்தம் குறித்து ஆசியான் உச்சி மாநாட்டில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது… இந்தியா தனது சந்தைகளில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை அனுமதிப்பதில்லை என்பதில் உறுதியாக உள்ள நிலையில், அமெரிக்காவிலிருந்து மரபணு மாற்றப்படாத மக்காச்சோளத்தை இறக்குமதி செய்வதற்கான ஒதுக்கீட்டை உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறது.
தற்போதைய வரம்பு, ஆண்டுக்கு 0.5 மில்லியன் டன்கள் என்று கூறப்படும் நிலையில், கோழித் தீவனம், பால் மற்றும் எத்தனால் துறைகளில் இருந்து அதிகரித்து வரும் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய அமெரிக்க சோள இறக்குமதியை இந்தியா அனுமதிக்கலாம்… அதுமட்டுமின்றி மனிதர்கள் மற்றும் கால்நடைகள் இரண்டுக்கும் மரபணு மாற்றம் செய்யப்படாத சோயாமீலை இறக்குமதி செய்வதை அனுமதிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
எரிசக்தியை பொறுத்தவரையில், இந்தியா படிப்படியாக ரஷ்ய எண்ணெயைச் சார்ந்திருப்பதை தவிர்த்து, அமெரிக்காவில் இருந்து எத்தனால் இறக்குமதியை அனுமதிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா சலுகைகளை வழங்கும் பட்சத்தில், இந்தியா நடத்தும் எண்ணெய் நிறுவனங்கள் அமெரிக்காவை நோக்கிக் கச்சா எண்ணெய் ஆதாரத்தை பன்முகப்படுத்த முறைசாரா முறையில் வழிநடத்தப்படும் வாய்ப்பும் உள்ளது.
வெள்ளை மாளிகையில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தின்போது, அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியிடம் மிகச் சிறந்த உரையாடலை நடத்தியதாகவும், வர்த்தகம் பற்றி உரையாடியதாகவும் கூறியிருந்தார். ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் பிரதமர் மோடி ஆர்வமாக உள்ளதகாவும், எனவே ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா படிப்படியாகக் குறைக்கும் என்று நம்புவதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
தற்போது, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யா தோராயமாக 34 சதவீதத்தை வழங்குகிறது, அதே நேரத்தில் நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைகளில் சுமார் 10 சதவீதம் அமெரிக்காவிலிருந்து வருகிறது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதலை குறைக்க வேண்டும் என்று முன் நிபந்தனை விதித்தே அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்தது.
அதேநேரத்தில் அமெரிக்கா சலுகைகள் வழங்காவிட்டாலும், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைக்கும் என்று அதிகாரிகள், ரஷ்யாவிடம் தெரிவித்திருப்பது, முக்கிய ராஜதந்திர நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
வர்த்தக ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேறும் பட்சத்தில், இந்திய பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 15 முதல் 16 சதவீதம் வரை குறைக்கும் வாய்ப்பு உள்ளது. இது நம் நாட்டின் வணிகர்களுக்குப் பெரிதும் உதவுவதோடு, அமெரிக்காவுக்கான இந்திய பொருட்களின் ஏற்றுமதியையும் ஊக்குவிக்கும்… இதன் காரணமாகவே அமெரிக்கா – இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
















