சரியான வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டைக் கோடிட்டு காட்டுவதற்கு பிரதமர் மோடி தயங்கியதே இல்லை. தீபாவளி வாழ்த்து சொன்ன அமெரிக்க அதிபருக்கு நன்றி தெரிவித்த தனது எக்ஸ் பதிவிலும் இதை ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார் பிரதமர் மோடி. அதுபற்றி ஒரு செய்தி தொகுப்பு.
வெள்ளை மாளிகையில், தனது ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குத்து விளக்கேற்றித் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினார்.
வழக்கமாக இது போன்ற நிகழ்ச்சிகள் அதற்காக அமைக்கப்பட்டுள்ள கூட்ட அரங்கு அல்லது பொது இடத்தில் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்த நிலையில் முதன் முறையாகத் தீபாவளி பண்டிகை ஓவல் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
தீபச் சுடரின் பிரகாசம், ஞானத்தின் பாதையைத் தேடவும், விடாமுயற்சியுடன் செயல்படவும், நமது பல ஆசீர்வாதங்களுக்கு எப்போதும் நன்றி செலுத்தவும் நமக்கு நினைவூட்டுகிறது எனக் குறிப்பிட்டு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய மக்களுக்கும், அமெரிக்கா முழுவதும் உள்ள இந்திய-அமெரிக்கர்களுக்கும் தனது மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.
மேலும், இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதிப்புக்குப் பிறகு, முதல் முறையாகப் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் உரையாடியதாகவும் கூறியிருந்தார். வழக்கம்போல, ஏற்கனவே கூறியவற்றை மீண்டும் கூறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் நல்ல உறவு இருப்பதாகவும், அவர் நல்ல மற்றும் சிறந்த மனிதர் என்றும், தன்னிடம் உறுதியளித்தது போலவே, இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைக் குறைத்து வருவதாகவும் தெரிவித்தார்.
ஏற்கெனவே கச்சா எண்ணெய் இறக்குமதி குறித்து ட்ரம்பின் கருத்தை இந்தியா முற்றிலுமாக நிராகரித்து வருகிறது. நிலையற்ற எரிசக்தி சூழ்நிலையில் இந்திய மக்களின் நலன்களைப் பாதுகாப்பதே அரசின் முன்னுரிமை என்று மத்திய அரசு உறுதியாகக் கூறி வருகிறது. சுய-தம்பட்டம் செய்யும் ட்ரம்ப் மீண்டும் பிரதமர் மோடி சொல்லாத கருத்துகளைச் சொன்னதாக மீண்டும் மீண்டும் கூறி வருவது, இந்தியாவின் மீது அழுத்தத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் முடிவுக்கு வருவதை விரும்பும் பிரதமர் மோடியிடம், பாகிஸ்தானுடன் போர் வேண்டாம் எனத் தெரிவித்ததாகவும் அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். அதிபர் ட்ரம்பின் அன்பான தீபாவளி வாழ்த்துகளுக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்து, எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
இருநாடுகளின் ஜனநாயக நடவடிக்கைகள் மற்றும் உலகளாவிய பொறுப்புகளை வலியுறுத்தியுள்ள பிரதமர் மோடி, உலகை நம்பிக்கையால் ஒளிரச் செய்து, பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிராக இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றுபட்டு நிற்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஓவல் அலுவலகத்தில் பேசிய ட்ரம்ப் கூறிய தவறான கருத்துக்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே பிரதமரின் எக்ஸ் பதிவு உள்ளதாகக் கூறப் படுகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளில் பாகிஸ்தான் இனி ஈடுபட்டால், இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என்பதையும், இந்தியாவின் நட்பு நாடுகள் பயங்கரவாதத்துக்கு எதிராக வலுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதையும் சரியான நேரத்தில் ட்ரம்புக்கு நினைவூட்டுவதாகப் பிரதமரின் எக்ஸ் பதிவு உள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளில் எதிர்பாராத மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததாகக் கூறி ட்ரம்பைப் பாராட்டுவது முதல், அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்பின் பெயரை முன்மொழிவது வரை, ட்ரம்பின் ஆதரவைப் பெற ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம், முன்னெப்போதும் இல்லாத வகையில், பாகிஸ்தான் இராணுவத் தலைமை தளபதி அசிம் முனீருக்கு வெள்ளை மாளிகையில் மதிய உணவு விருந்து அளிப்பதும், பாகிஸ்தானுடன் வர்த்தக மற்றும் க்ரிப்ட்டோ ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதும் என ட்ரம்பும் இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் பக்கம் சாயத் தொடங்கினார்.
இந்தப் பின்னணியில் தீபாவளி வாழ்த்து சொன்ன ட்ரம்புக்கு நன்றி தெரிவிக்கும் தனது எக்ஸ் பதிவில், இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டைப் பிரதமர் மோடி தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
















