தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்ட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சரியான வாக்காளர்களை சேர்ப்பதற்கான பணி நாடு முழுவதும் தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி 2 ஆம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
நவம்பர் 4 ஆம் தேதி முதல் இந்த சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கணக்கெடுப்பு தொடங்கும் என்றும் அவர் கூறினார். தொடர்ந்து சிறப்பு தீவிர திருத்த பணிகள் முடிக்கப்பட்டு 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இறந்த நபர்களின் பெயர்களை நீக்கிவிட்டு சரியான வாக்காளர் பட்டியலை வெளியிடுவதே இதன் நோக்கம் என்றும் அவர் கூறினார். மேலும் வாக்காளர் தீவிர திருத்த பணிகள் முடிந்து வெளியாகும் பட்டியலின் அடிப்படையில் 12 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் என்றும் ஞானேஷ்குமார் தெரிவித்தார்.
















