ஆவடி அருகே உள்ள நத்தமேடு ஏரி நிரம்பி குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ள ட்ரோன் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு சில தினங்களாக ஆவடி, திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக திருநின்றவூரில் உள்ள நத்தமேடு ஏரி முழுவதுமாக நிரம்பியுள்ளது.
தொடர் மழை காரணமாக ஏரியில் இருந்து வெளியேறிய உபரி நீர் குடியிருப்புகளை சூழ்ந்தது. 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ட்ரோன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மழைக்காலங்களில் ஆண்டு தோறும் நத்தமேடு ஏரி நிரம்பி பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வீடுகளை தண்ணீர் சூழ்வதால் விஷ பூச்சிகள் வீட்டுக்குள் வருவதாகவும், ஏரியை தூர்வாராததால் தண்ணீர் வெளியேறி பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறியுள்ளனர். மேலும், குடியிருப்புகளை சூழ்ந்துள்ள தண்ணீரை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
சென்னை அம்பத்தூர் CTH சாலை, தொடர் மழை காரணமாக குண்டும் குழியுமாக மாறியுள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
புறநகர் பகுதிகளிலிருந்து சென்னைக்கு பணிபுரிய வரும் மக்கள் அம்பத்தூர் CTH சாலையையே பயன்படுத்துகின்றனர். அதேபோல் தென் மாவட்டங்களிலிருந்து மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் பேருந்துகளும் இந்த சாலை வழியாகவே செல்கின்றன.
இந்நிலையில் தொடர் கனமழை மற்றும் போதிய பராமரிப்பு இல்லாததால் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் சாலை பள்ளங்களில் தேங்கிய தண்ணீரால் வாகனங்கள் நிலை தடுமாறி விபத்து ஏற்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் சென்னை பாரிவாக்கத்தில் உள்ள குடியிருப்பு பகுதி மழை நீர் சூழ்ந்து தனித்தீவை போல காட்சியளிப்பதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
மோன்தா புயல் காரணமாக சென்னை பாரிவாக்கத்தில் உள்ள குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியே தனித்தீவு போல காட்சியளிப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
தேங்கிய மழைநீருடன் கழிவுநீரும் கலந்து கடும் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு மழைநீர் வடிகால் முறையாக அமைக்காததே காரணம் என குற்றம்சாட்டியுள்ள அப்பகுதி மக்கள், தேங்கிய நீரை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.
















