ராஜஸ்தானின் புகழ்பெற்ற “புஷ்கர் மாட்டுவிழா” இந்த ஆண்டு விலையுயர்ந்த கால்நடைகளின் வருகையால் பேசுபொருளாக மாறியுள்ளது. 15 கோடி ரூபாய் மதிப்பிலான குதிரை, 23 கோடி ரூபாய் மதிப்பிலான எருமை போன்ற ஆயிரக்கணக்கான கால்நடைகள் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன. இதுகுறித்து விவரிக்கிறது இந்தச் செய்தி தொகுப்பு.
ராஜஸ்தானில் ஆண்டுதோறும் நடைபெறும் புஷ்கர் மாட்டுவிழா இந்தியாவின் மிகப்பெரிய கால்நடை திருவிழாவாகப் பார்க்கப்படுகிறது. புஷ்கர் ஏரிக்கரையில் ஒவ்வொரு அக்டோபர் – நவம்பர் மாதங்களிலும் இந்த விழா நடத்தப்படுகிறது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான மாடுகள், குதிரைகள், ஒட்டகங்கள், எருமைகள் போன்ற கால்நடைகள் விற்பனைக்காகவும், பார்வைக்காகவும் காட்சிப்படுத்தப்படுகின்றன.
கிராமிய சந்தைகள், இனப்பெருக்க போட்டிகள், பாரம்பரிய உடை அணிந்த ஒட்டகங்களின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் போன்றவை இவ்விழாவின் சிறப்பம்சங்களாகும். இதன் காரணமாக இது வெறும் வர்த்தகத்திற்கான இடமாக மட்டுமல்லாமல், ராஜஸ்தானின் பண்பாடு, மரபு மற்றும் கிராமிய வாழ்க்கை முறையை எடுத்துரைக்கும் பெருவிழாவாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான புஷ்கர் மாட்டுவிழாவில் நாட்டின் மிக விலையுயர்ந்த மாடுகள், குதிரைகள், எருமைகள் உள்ளிட்ட கால்நடைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த விழாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள 15 கோடி ரூபாய் மதிப்பிலான குதிரையும், 23 கோடி ரூபாய் மதிப்பிலான எருமையும் அங்கு வந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
சண்டிகரைச் சேர்ந்த கேரி கில் என்பவருக்குச் சொந்தமான அந்த மர்வாரி இன குதிரைக்கு ‘ஷஹ்பாஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இரண்டரை வயது நிறைந்த அந்தக் குதிரை பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள நிலையில், இதுவரை 9 கோடி ரூபாய் வரை விலைப்பேச்சு நடந்துள்ளதாக அதன் உரிமையாளர் கேரி கில் தெரிவித்துள்ளார்.
மற்றொருபுரம் ராஜஸ்தானைச் சேர்ந்தவருக்குச் சொந்தமான ‘அன்மோல்’ என்ற எருமையும் 23 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. மன்னரைப்போல் பராமரிக்கப்படும் எருமைக்கு நாள்தோறும் பால், நெய், பருப்பு வகைகள், முந்திரி உள்ளிட்ட உலர் பழங்கள் உணவாக வழங்கப்படுவதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
உஜ்ஜயினி பகுதியைச் சேர்ந்த ‘ராணா’ என்ற பெயர்கொண்ட மற்றொரு எருமையும் 25 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. 600 கிலோ எடை, 8 அடி நீளம், ஐந்தரை அடி உயரம் என ஆஜானுபாஹுவாகக் காட்சியளிக்கும் அந்த எருமை நாள்தோறும் கடலை மாவு, முட்டை, பால், நெய் மற்றும் லிவர் டானிக் எனச் சுமார் ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்களை உட்கொள்வதாக அதன் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல, 285 குட்டிகளின் தந்தையாக விளங்கும் ‘பாதல்’ என்ற பிரபல குதிரையும் 3-வது முறையாகப் புஷ்கர் மாட்டு விழாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் குதிரைக்கு 11 கோடி ரூபாய் வரை விலைப்பேச்சு வந்தபோதிலும் அதன் உரிமையாளர் அக்குதிரையை விற்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
ராஜஸ்தானில் உள்ள கால்நடை மரபுகளின் பெருமைகளை வெளிப்படுத்தும் இந்தப் புஷ்கர் மாட்டுவிழா, கடந்த அக்டோபர் 23-ம் தேதி தொடங்கிய நிலையில் நவம்பர் 7-ம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை விழாவில் 3 ஆயிரத்து 21 கால்நடைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து கால்நடைகளும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அடையாளங்கள் குறிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கால்நடைத்துறை இணை இயக்குநர் சுனில் கியா தெரிவித்துள்ளார்.
ஒட்டகங்கள், பசுக்கள், எருமைகள் மற்றும் குதிரைகள் போன்ற விலையுயர்ந்த கால்நடைகளின் பதிவுகள் டிஜிட்டல் முறையில் பராமரிக்கப்படுவதாகவும், அவற்றின் உடல்நலனை பராமரிக்க 24 மணி நேரமும் மருத்துவர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
















