உள்நாட்டு கப்பல் கட்டும் திறனை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு சுமார் எழுபதாயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்று வரும் இந்திய கடல்சார் வாரம் என்ற 5 நாள் சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இதற்காக மும்பையில் உள்ள பம்பாய் கண்காட்சி மையத்திற்கு வருகை தந்த அவர், அங்கு நடக்கும் உலகளாவிய கடல்சார் தலைமை நிர்வாகிகளின் கூட்டமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பின்னர் மாநாட்டில் பேசிய அவர், இந்தியாவில் நீர்வழிப் போக்குவரத்து மூன்றிலிருந்து 32-ஆக உயர்ந்துள்ளதாகவும், நமது துறைமுகங்களின் நிகர ஆண்டு வருமானம், கடந்த பத்தாண்டுகளில் ஒன்பது மடங்கு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், அடுத்த 25 ஆண்டுகள் மிக முக்கியமானவை என்பதால், இந்தியாவின் கவனம் நீலப் பொருளாதாரம் மற்றும் நிலையான கடலோர வளர்ச்சி மீது உள்ளதாகவும், கப்பல் கட்டுமானத் துறையை மேம்படுத்துவதில் இந்தியா தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
















