ஈரானின் சபஹார் துறைமுகத்தில் இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா விதித்திருந்த தடைகளுக்கான விலக்கு, வரும் 2026-ம் ஆண்டின் முற்பகுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் முக்கிய பிராந்திய இணைப்பு திட்டமான சபஹார் முயற்சி தடையின்றி தொடரும் நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.
ஈரானின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சபஹார் துறைமுகம், இந்தியா, ஈரான், ரஷ்யா மற்றும் மத்திய ஆசிய நாடுகளை இணைக்கும் முக்கிய வர்த்தக வழியாக உள்ளது. பாகிஸ்தானை கடக்காமல் ஆஃப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஸகஸ்தான் போன்ற மத்திய ஆசிய நாடுகளுடன் இந்தியாவுக்கு நேரடி வர்த்தக இணைப்பை ஏற்படுத்த இந்த வழி உதவுகிறது.
அத்துடன் ஆஃப்கானிஸ்தானுக்கான மனிதாபிமான உதவிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இந்தியா இவ்வழியாகவே வழங்கி வருகிறது. இதன் மூலம் சபஹார் துறைமுகம் இந்தியாவுக்கு பொருளாதார ரீதியிலும், மூலோபாய ரீதியிலும் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
2024-ம் ஆண்டு கையெழுத்தான 10 ஆண்டுகால ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான INDIA PORTS GLOBAL LIMITED (IPGL), இந்தத் துறைமுகத்தின் பணிகளை மேம்படுத்துவது மற்றும் வர்த்தக வழித்தடங்களை ஊக்குவிப்பது உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்றுள்ளது. முன்னதாக 2018-ம் ஆண்டு முதல் இந்த நடவடிக்கைகளை ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பித்து இந்தியா மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில், தற்போது இந்தத் துறைமுகத்தை INTERNATIONAL NORTH-SOUTH TRANSPORT CORRIDOR (INSTC) எனப்படும் பன்முக போக்குவரத்து வலையமைப்புடன் இணைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த இணைப்பு முழுமையாக அமலுக்கு வந்ததும், மும்பை முதல் ரஷ்யாவின் அஸ்த்ராகன் வரை சரக்கு போக்குவரத்து சூயஸ் கால்வாயைவிட வேகமாகவும், குறைந்த செலவிலும் நடைபெறக்கூடும் என நிபுணர்கள் தெவிக்கின்றனர். முன்னதாகச் சபஹார் துறைமுகத்தையும், அதன் தொடர்புடைய நடவடிக்கைகளையும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கும் வகையில் அமெரிக்கா கடுமையான தடைகளை விதித்திருந்தது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானை தனிமைப்படுத்தும் நோக்கில், அதன் ஆற்றல், வங்கி உள்ளிட்ட உட்கட்டமைப்புகளை குறிவைத்து இந்தத் தடைகளை விதித்திருந்தார். மேலும், சபஹார் துறைமுகத்தைத் தொடர்புபடுத்தி வர்த்தகங்களில் ஈடுபடும் நிறுவனங்கள்மீது கூடுதல் தடைகள் விதிக்கப்படும் என்றும் டிரம்ப் எச்சரித்திருந்தார்.
இதன் காரணமாகப் பல உலக நாடுகள் ஈரானில் முதலீடு செய்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. இதற்கிடையே கடந்த செப்டம்பர் 16-ம் தேதி அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், சபஹார் துறைமுகத்தில் தொடரும் நடவடிக்கைகள் கூடுதல் தடைகளுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் மனிதாபிமான மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு நோக்கங்களைக் கருத்தில் கொண்டு, அமெரிக்கா விதித்த தடைகளுக்கு விலக்கு அளித்திருந்தது. அந்த விலக்கு கடந்த 28-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், விலக்குக்கான புதிய நீட்டிப்பை அமெரிக்கா வழங்கியுள்ளது.
இதன் மூலம் IPGL நிறுவனம் 2026-ம் ஆண்டு முற்பகுதி வரை, சபஹார் துறைமுகத்தில் உள்ள ஷஹீத் பெஹெஷ்தி டெர்மினலை தொடர்ந்து இயக்கவும், மேம்படுத்தவும் அனுமதி பெற்றுள்ளது. இதன் மூலம், இந்தியா அஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை கடந்து செல்ல முடியாத நிலப்பரப்புகளுக்கு கோதுமை, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களைத் தடையின்றி தொடர்ந்து அனுப்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது.
BELT AND ROAD INITIATIVE (BRI) திட்டத்தின் ஒரு பகுதியாகப் பாகிஸ்தானில் உள்ள குவாதர் துறைமுகத்தில் சீனா மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ளது. குவாதர் துறைமுகம், சபஹார் துறைமுகத்திற்கு நெருக்கமாக அமைந்துள்ளதால், அது சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு பிராந்திய ரீதியில் வலுவான பொருளாதார மற்றும் ராணுவ நிலையை வழங்குகிறது.
இந்நிலையில், அதற்கு எதிராகச் சபஹார் துறைமுகத்தில் தனது பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம், சீனா – பாகிஸ்தான் கூட்டணியின் பிராந்திய செல்வாக்கை சமநிலைப்படுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
அமெரிக்கா வழங்கியுள்ள விலக்கு நீட்டிப்பு மத்திய ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தக வழிகளை ஆழப்படுத்தும் வாய்ப்பை வழங்கியுள்ளதாகவும், அமெரிக்கா மற்றும் ஈரானுடன் சமநிலை உறவைப் பேணும் இடத்தை உருவாக்கியுள்ளதாகவும் துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சபஹார் வழியாக மேற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளை இணைக்கும் இந்தியாவின் கனவை நிஜமாக்கும் பாதையில் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
 
			 
                    















