வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக திமுக நடத்திய ஆலோசனைக் கூட்டத்தை பாஜக, அதிமுக, பாமக, தவெக உள்ளிட்ட 24 கட்சிகள் புறக்கணித்தன.
பீகாரைத் தொடர்ந்து, தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடங்கப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதன்படி, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள், வரும் 4ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசர அவசரமாகச் செய்யக் கூடாது என்றும், கால அவகாசம் கொடுத்து செய்ய வேண்டும் எனவும், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதனால், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு முன்னதாக ஆலோசனை கூட்டம் நடத்த மொத்தமாக 64 கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது.
இந்த நிலையில், சென்னை தியாகராய நகரில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை பாஜக, அதிமுக, பாமக, தவெக உள்ளிட்ட 24 கட்சிகள் புறக்கணித்தன
















