திருச்சியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் குளறுபடிகளால் டன் கணக்கிலான நெல் மணிகள் சாலையில் கொட்டி வைக்கப்பட்டுள்ளன.
அரும்பாடுபட்டு விளைவித்த நெல்மணிகள் முழுமையாக வீணாகும் முன்பே கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் விளைவாக காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் உட்பட கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து வீணாகியுள்ளது.
கொள்முதல் நிலையங்களில் போதிய உட்கட்டமைப்பு வசதியின்மை, உபகரணங்கள் மற்றும் வேலை ஆட்கள் தட்டுப்பாடு போன்ற குளறுபடிகளால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் 100-க்கும் அதிகமான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வரும் நிலையில், அங்கு நெல் மணிகளையும் மூட்டைகளையும் பாதுகாப்பாக வைக்க உரிய வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கல்லணை சாலையில் உள்ள பனையபுரம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் முழுமையாகவும், முறையாகவும் கொள்முதல் செய்யப்படாத காரணத்தினால் பல டன் நெல் மணிகள் சாலையில் கொட்டி வைக்கப்பட்டுள்ளன
அரும்பாடு விளைவித்த நெல்மணிகளை கொள்முதல் செய்யாததன் விளைவாக விவசாயிகள் அனைவரும் இரவு பகல் பாராமல் சாலையில் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல் மணிக்கு காவல் காக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
உரிய நேரத்தில் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
20 முதல் 30 நாட்களாக சாலையில் கொட்டி வைக்கப்பட்டிருக்கும் நெல் மணிகள் ஒருபுறம் மழை மறுபுறம் வெயில் என பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் மிகுந்த வேதனைக்குள்ளாகியுள்ளனர்.
ஏற்கனவே பல்வேறு இன்னல்களை சந்தித்து விவசாயத்தை தொடர்ந்து வரும் நிலையில், இனியும் காலம் தாழ்த்தாமல் அனைத்து விவசாயிகளின் நெல்மூட்டைகளையும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.
















