மீளவிட்டான் ரயில் நிலையத்தில், ரயில்மீது ஏறி ரீல்ஸ் எடுக்க முயன்ற 3 பேர் மீது மின்சாரம் தாக்கியதில் ஒருவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த நண்பர்களான அருண், கவின், ஹரிஷ் ஆகியோர் விடுமுறை நேரங்களில் செல்போனில் லைக்குகளை பெறுவதற்காக ரீல்ஸ் எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
மீளவிட்டான் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு சரக்கு ரயிலின் பெட்டியின் மீது ஏறி 3 பேரும் செல்போனில் ரீல்ஸ் எடுக்க முயன்றுள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாகக் கல்லூரி மாணவரான அருண் மீது உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதில், அருண் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மின்சாரம் தாக்கியதில் கை, கால்களில் தீக்காயமடைந்த பள்ளி மாணவர்களான கவின், ஹரீஷ் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் மற்றும் சிப்காட் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















