இங்கிலாந்து மன்னர் சார்லஸை விட, பிரதமர் மோடியிடம் புகைப்படம் எடுத்துக் கொள்ளவே வீராங்கனைகள் விருப்பம் தெரிவித்தனர் என மகளிர் அணியின் கிரிக்கெட் பயிற்சியாளர் அமோல் மஜூம்தார் கூறியுள்ளார்.
கடந்த நவம்பர் 2-ம் தேதி 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணியினர், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றனர்.
அப்போது பேசிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அமோல் மஜூம்தார், இங்கிலாந்தில் மன்னர் சார்லஸை சந்தித்தபோது நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவம்குறித்து பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தார்.
அதன்படி, கடுமையான நெறிமுறைகள் காரணமாக இங்கிலாந்து மன்னர் சார்லஸை மொத்தம் 20 பேர் மட்டுமே சந்திக்க முடிந்ததாக அமோல் மஜூம்தார் கூறினார்.
இதற்காகத் தான் அணியினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், தனது வீராங்கனைகள் இங்கிலாந்து மன்னர் சார்லஸை விட, பிரதமர் மோடியுடன் இருக்கும் புகைப்படமே தங்களுக்கு வேண்டும் எனக் கூறியதாக அமோல் மஜூம்தார் பெருமைபட கூறினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
















