‘தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு’ என்று பெருமையுடன் அழைக்கப்படும் திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கியப் பகுதியான பாளையங்கோட்டையில், ரயில் நிலையத்திற்கும் பேருந்து நிலையத்திற்கும் இடையிலான பேருந்து வசதிகள் மிகக்குறைவாக இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. பேருந்து வசதியின்மை காரணமாக மக்கள் படும் துயரங்களை இந்தச் செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்
பள்ளி, கல்லூரிகள், தொழில்நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றோடு அரசு அலுவலகங்களும் நிறைந்திருக்கும் பகுதியாக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதி திகழ்ந்து வருகிறது. நெல்லை மட்டுமின்றி தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்தும் கல்வி நிமித்தமாகவும், தொழில் நிமித்தமாகவும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பாளையங்கோட்டைக்கு ரயில்மூலம் வந்து பேருந்து நிலையங்களுக்குச் செல்கின்றனர்.
ஆனால், பாளையங்கோட்டை ரயில் நிலையத்திற்கும், பேருந்து நிலையத்திற்கும் இடையில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தை இணைப்பதற்கான பேருந்து வசதிகள் போதுமான இல்லாத காரணத்தினால் திருச்செந்தூர் போன்ற பகுதிகளில் இருந்து 20 ரூபாய் பயணக் கட்டணத்தில் ரயில் மூலமாகப் பாளையங்கோட்டைக்கு வரும் பயணிகள், அங்கிருந்து பேருந்து நிலையத்திற்கு செல்ல 100 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை ஆட்டோவிற்காகச் செலவழிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் போதிய பேருந்து வசதியின்றி இரவு நேரங்களில் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பேருந்து வசதியின்மையை சாதகமாகப் பயன்படுத்தி ஆட்டோ மற்றும் வாடகை வாகனங்கள் தங்களின் கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்தியிருப்பதால் வசதி வாய்ப்பில்லாத பலர் 5 கிலோமீட்டர் தூரத்தை நடைபயணமாகவே கடந்து செல்கின்றனர்.
பள்ளி கல்லூரி மாணவர்கள் தொடங்கி அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித்தருவது தனது கடமை என்பதை மாவட்ட நிர்வாகம் உணர்ந்து ரயில் நிலையத்திற்கும் போக்குவரத்திற்கும் இடையில் போதுமான பேருந்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
















