சர்வதேச சுற்றுலாத்தலமான கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்கள் தற்போது சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் பகுதிகளாக மாறிவருகின்றன. சாலையோரங்களில் கொட்டிக் கிடக்கும் குப்பைகளும், சாலைகளில் ஓடும் கழிவுநீரும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படுவதோடு சர்வதேச சுற்றுலாத்தலங்களில் முதன்மையாக விளங்கும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கொடைக்கானலின் சீதோசன நிலையையும், இயற்கை அழகையும் ரசிக்க இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நிலையில், ஆங்காங்கே கொட்டியிருக்கும் குப்பைகள் அவர்களுக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நாள்தோறும் அள்ள வேண்டிய குப்பையை வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே அகற்றுவதாலும், அளவுக்கு மீறிய குப்பைகளும் சாலையோரங்களில் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதோடு நோய்தொற்று ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது. மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், பூண்டி ஆகிய பகுதிகளில் அதிகளவில் கொட்டிக் கிடக்கும் குப்பைகள் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முகம் சுழிக்கும் வகையில் அமைந்துள்ளது.
கொடைக்கானல் பிரதான சாலையில் பெருமாள் மலைப்பகுதியில் அமைந்திருக்கும் குப்பைமேடுகளை அகற்றுவதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் அதில் உள்ள நெகிழிப்பைகளை உண்டு ஏராளமான வனவிலங்குகளும் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
தேசிய அளவில் தலைசிறந்த சுற்றுலாத் தளங்களில் முதன்மையானதாகத் திகழும் கொடைக்கானலில் நிலவும் சுகாதார சீர்கேடுகள், அதன் நற்பெயரையும் சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் குறைக்கும் வகையில் அமைந்துள்ளன.
உடனடியாக மாவட்ட நிர்வாகவும் இப்பிரச்னையில் கூடுதல் கவனம் செலுத்தி குப்பைகளை உடனுக்குடன் அகற்றி சுகாதாரத்தை பேணிக்காக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது
















